டொரண்டோ நகரின் கிழக்குப் பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 42 வயதுடைய போக்குவரத்து முகவர் ஒருவர், கழிவு லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மில்வுட் ரோடு மற்றும் ஓவர்லியா பார்லேவார்டு சந்திப்பில் நடந்த இந்த விபத்து குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆய்வாளர் பீட்டர் வாலஸ், 33 வயதான ஓட்டுநர் ஓட்டி வந்த லாரி, தெற்கு நோக்கிச் செல்லும் மில்வுட் ரோடில் இருந்து கிழக்கு நோக்கி ஓவர்லியா பார்லேவார்டுக்கு இடதுபுறம் திரும்பியபோது, அங்கு போக்குவரத்தை சீரமைத்துக் கொண்டிருந்த போக்குவரத்து முகவர் மீது மோதியதாகத் தெரிவித்தார்.
அவசரக்கால மருத்துவக் குழுவினர் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே தங்கி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் நெஞ்சை பிழியும் சம்பவம். உயிரிழந்தவரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். நகரின் போக்குவரத்து பாதுகாப்பாக நடைபெற அவர் மிக முக்கிய பங்காற்றினார் என பீட்டர் வாலஸ் கூறினார்.
இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த டொரண்டோ மேயர் ஒலிவியா சௌ, “போக்குவரத்து முகவர்கள் மிகவும் கடினமான சூழலில் பணிபுரிகின்றனர்.
அனைத்து வானிலை நிலைகளிலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தங்கள் உயிரைப் பணயம் வைத்து உழைக்கின்றனர். இந்த இழப்பு அவர்கள் சந்திக்கும் அபாயங்களை மீண்டும் நினைவூட்டுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்குத் தனது இரங்கலைத் தெரிவித்த மேயர், காவல்துறை விசாரணைக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் கூறினார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.