டொரண்டோவின் பிரைடில் பாத் (Bridle Path) பகுதியில் உள்ள குடியிருப்பு வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நான்கு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேவியூ அவென்யூ (Bayview Avenue) மற்றும் லாரன்ஸ் அவென்யூ (Lawrence Avenue) சந்திப்புக்கு அருகாமையில் அதிகாலை 3:45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியிட்டுள்ள டொரண்டோ பொலிஸார், குறித்த வீட்டிற்குள் இருந்த மூவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், காயமடைந்த நால்வரின் உடல்நிலை குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் மூவர், எஸ்.யு.வி. (SUV) ரக வாகனமொன்றில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பியோடிய சந்தேகநபர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் பயணித்த வாகனம் தொடர்பான மேலதிக விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாக டொரண்டோ பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.