கனடாவின் மொண்ட்ரியல் அருகே கைப்பேசியில் விளையாட்டு விளையாடியவாறு லொறியைச் செலுத்தி, 7 வாகனங்கள் மோதிய கோர விபத்தை ஏற்படுத்தி தாய் மற்றும் மகனின் உயிரிழப்பிற்கு காரணமான ஒன்டாரியோவைச் சேர்ந்த லொறி ஓட்டுநருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
30 வயதை எட்டும் பல்ஜீத் சிங் என்பவருக்கே கியூபெக் நீதிமன்றத்தின் நீதிபதி சாஷா பிளேஸ் லோங்வேய் நீதிமன்றத்தில் வைத்து இந்தத் தண்டனையை வழங்கியுள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் திகதி மொண்ட்ரியலின் தெற்குப் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை 30 இல் இடம்பெற்ற இந்த விபத்தில், ஒரே காரில் பயணித்த 42 வயதான நான்சி லெஃப்ரான்கோயிஸ் மற்றும் அவரது 11 வயது மகன் லோயிக் செவாலியர் ஆகிய இருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
விசாரணைக்காக ஏற்கனவே சிறையில் கழித்த காலத்தைக் கருத்தில் கொண்டு, பல்ஜீத் சிங் மேலும் 4 ஆண்டுகள், 4 மாதங்கள் மற்றும் 4 நாட்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
அத்துடன் அவருக்கு 10 ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏப்ரல் மாதம், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியமை மற்றும் காயம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளை பல்ஜீத் சிங் ஒப்புக்கொண்டார்.
53 அடி நீளமுடைய டிரக் லொறியை ஓட்டிச் சென்றபோது, தனது கைப்பேசியில் ‘லூடோ’ (Ludo) விளையாடியதை அவர் ஒப்புக்கொண்டார். வீதிப் புனரமைப்புப் பகுதிக்கு அருகில் போக்குவரத்து மெதுவாகச் சென்றபோது, லொறியின் வேகத்தைக் குறைக்கத் தவறியதால் இந்த விபத்து நேரிட்டுள்ளது.
அவரது இந்த அலட்சியப் போக்கும், வாகனம் ஓட்டும்போது கைப்பேசியைப் பயன்படுத்தியதும் குற்றத்தை தீவிரப்படுத்தும் காரணிகள் என நீதிபதி சுட்டிக்காட்டினார்.
எனினும், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டமை மற்றும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கோரியமையைக் கருத்தில் கொண்ட போதிலும், விபத்தின் பேரழிவு விளைவுகள் காரணமாகவே இந்தத் தண்டனை வழங்கப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உயிரிழந்த பெண்ணின் கணவர் பெனோயிட் லாவோயி, 3 வாரங்கள் கோமா நிலைக்குச் சென்று தனது மனைவியின் இறுதிச் சடங்கிலும் பங்கேற்க முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.
சம்பவத்திற்குப் பின்னர் ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையைத் தொடர்ந்து பல்ஜீத் சிங் இந்தியாவுக்குத் தப்பிச் சென்று தனது சமூக ஊடகக் கணக்குகளையும் நீக்கினார். கனடா தழுவிய பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், 2025 ஆகஸ்ட் 21 அன்று அவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு கனடாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
லொறியின் கேமரா பதிவுகளை பரிசோதித்ததில், அவர் தனது கடைசி 3 பயணங்களின் போது 40க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிகளை மீறியுள்ளதும், வாகனம் ஓட்டும்போது தொடர்ந்து கைப்பேசியைப் பயன்படுத்தியதும், கட்டாய ஓய்வு நேரங்களை எடுக்காமல் வாகனம் ஓட்டியதும் தெரியவந்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.