கனடியப் பிரஜை என்பதை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அரச சான்றிதழைப் பெற முயலும் விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதற்கு 2 ஆண்டுகளுக்கும் மேலாகக் காத்திருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மதிப்பீடுகள் மற்றும் குடிவரவு நிபுணர்களின் கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளில் விண்ணப்பங்களைச் பரிசீலிக்கும் காலம் கணிசமாக அதிகரித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் சர்ச்சைக்குரிய கொள்கைகள் மற்றும் கடந்த டிசம்பரில் அமலுக்கு வந்த குடியுரிமைச் சட்டத் திருத்தம் (Bill C-3) ஆகியவற்றின் காரணமாகவே விண்ணப்பங்களின் எண்ணிக்கை திடீரென உயர்ந்துள்ளதாகக் குடிவரவு வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மசோதா C-3, பரம்பரை வழியிலான குடியுரிமைக்கான முதன்முறை வரம்பை நீக்கியதால், கனடாவில் முன்னோர்களைக் கொண்ட பலருக்கும் குடியுரிமை பெற கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
திடீரென விண்ணப்பிக்கத் தொடங்கியவர்களின் பெரும்பாலானோர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என வான்கூவரைச் சேர்ந்த குடிவரவு வழக்கறிஞரும் கொள்கை ஆய்வாளருமான ரிச்சர்ட் குர்லேண்ட் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சான்றைப் பெறுவது முன்னர் விரைவாக இருந்தது, ஆனால் டிரம்பின் கொள்கைகளால் ஏற்பட்ட தாக்கம் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை பெருமளவில் உயர்த்தியுள்ளது. இதனால் பரிசீலனை நேரமும் நீடித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.
ஒட்டாவாவைச் சேர்ந்த குடிவரவு வழக்கறிஞர் செட்ரிக் மரின் கூறுகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 9 முதல் 10 மாதங்களாக இருந்த பரிசீலனை நேரம், தற்போது 25 மாதங்களாக உயர்ந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் காத்திருப்பு காலம் 3 ஆண்டுகளாக உயரக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அவசரத் தேவைகளைக் கொண்ட விண்ணப்பங்களுக்கு அரசு முன்னுரிமை அளித்து வருவதால், சாதாரண விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகள் மேலும் தாமதமாகி வருகின்றன.
குறிப்பாக, வேலை அனுமதிப் பத்திரங்கள் காலாவதியாகும் நிலையில் உள்ளவர்கள் மற்றும் அவசர உதவி தேவைப்படுவோரின் விண்ணப்பங்கள் விரைவாகப் பரிசீலிக்கப்படுகின்றன.
தற்போது சுமார் 121,800 பேர் தங்களது விண்ணப்பங்களின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகக் தரவுகள் தெரிவிக்கின்றன.
நீண்ட தாமதம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த கனடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அனாஹிதா பெலாடி, விண்ணப்பங்கள் சட்டப்படி நியாயமாகவும் முடிந்தவரை விரைவாகவும் பரிசீலிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்டுள்ள பரிசீலனை நேரங்கள் தோராயமான மதிப்பீடுகளே தவிர உத்தரவாதம் அல்ல என்றும், ‘முன்னதாக வரும் விண்ணப்பங்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையிலேயே பரிசீலனை நடைபெறுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
எனினும், நிலுவையில் உள்ள பெருமளவிலான விண்ணப்பங்களை விரைந்து முடிக்க அரசு கூடுதல் ஊழியர்களைப் பணியமர்த்த வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.