Reading Time: < 1 minute

கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணத்திலுள்ள செயிண்ட் ஜான் நகரில், தனது இரு மகன்களைக் கொடூரமாகக் கொலை செய்த 46 வயதான ரோமன் காமிஷ்னி என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tamil Business Directory

கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் திகதி அதிகாலை, காமிஷ்னி தனது 10 மற்றும் 17 வயதுடைய இரு மகன்களையும் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.

பின்னர், ‘நெயில் கன்’ ஆணி அடிக்கும் கருவி மூலம் தனது தலையில் தானே அடித்துக்கொண்டு தற்கொலைக்கும் முயன்றார். கடந்த ஜூன் 24 அன்று இவர் மீதான முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட நிலையில், தற்போது இவருக்கு இரண்டு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அவை ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கனடாவின் சட்டப்படி முதல் நிலை கொலைக் குற்றவாளிக்கு 25 ஆண்டுகளுக்குப் பிணை பெற முடியாது.

விவாகரத்து செய்த தனது மனைவியைப் பழிவாங்குவதற்காகவும், அவருக்குத் தண்டனை அளிப்பதற்காகவுமே காமிஷ்னி இந்த கொடூரச் செயலைச் செய்துள்ளார் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

கொலை செய்வதற்கு முன்பாக, “நான் அனைவரையும் கொன்றுவிட்டேன், பொலிஸாரையும் ஆம்புலன்ஸையும் வரச் சொல்” என்று மனைவிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி மற்றும் கடிதங்கள் நீதிமன்றத்தில் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன.

எனினும், நீதிமன்றத்தில் பேசிய காமிஷ்னி, “எனக்கு அன்றைய தினம் நடந்தது எதுவும் நினைவில் இல்லை, என் குழந்தைகளைக் கொல்லும் திட்டம் எனக்கு இருக்கவில்லை” என்று வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதி டேரல் ஸ்டீபன்சன், “உம்மீது மேலும் வார்த்தைகளை வீணடிக்க விரும்பவில்லை. நீர் ஒரு திட்டமிட்டு அதைச் செயல்படுத்தியுள்ளீர், அதற்கான தண்டனையை அனுபவிக்கும் நேரம் இது” என்று கூறி தண்டனையை அறிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.