Reading Time: < 1 minute

கனடாவின் நயாகரா வீழ்ச்சி பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி இடம்பெற்ற பாரிய விபத்தில் லொறி சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், குயின் எலிசபெத் நெடுஞ்சாலை பல மணிநேரம் மூடப்பட்டிருந்தது.

Tamil Business Directory

இவ்விபத்து புதன்கிழமை பிற்பகல் 2:45 மணியளவில் ‘தொரோல்ட் ஸ்டோன்’ மற்றும் ‘மவுண்டன்’ வீதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான லொறி நெடுஞ்சாலையின் இரு வழிகளையும் மறைத்து குறுக்கே நின்றதாகவும், அத்துடன் வீதியின் மேலே அமைக்கப்பட்டிருந்த பெரிய வழிகாட்டிப் பலகையில் சிக்கிக்கொண்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

லொறியை ஓட்டிவந்த சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மற்றொரு வாகனத்தின் சாரதி ஹெலிகாப்டர் மூலம் அவசர சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரது காயங்களின் தீவிரத்தன்மை குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. விபத்து தொடர்பான விசாரணைகள் மற்றும் சேதமடைந்த வீதி, பாதுகாப்புத் தடுப்புகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகளை சீரமைக்கும் பணிகள் காரணமாகவே நெடுஞ்சாலை நீண்ட நேரம் மூடப்பட்டது.

விபத்து நடப்பதற்கு முன்னர் அப்பகுதியில் ஆபத்தான அல்லது கட்டுப்பாடற்ற முறையில் வாகனம் ஓட்டப்பட்டதாகக் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதில் இந்த விபத்தில் தொடர்புடைய வாகனம் ஏதேனும் அடங்குகிறதா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் கெரி ஷிமிட் குறிப்பிட்டார்.

எனவே, விபத்து நடந்த நேரத்தில் அப்பகுதியில் பயணித்தவர்கள் யாரேனும் அசாதாரண நிகழ்வுகளைக் கண்டிருந்தாலோ அல்லது தங்களது டேஷ்கேம்களில் பதிவாகியிருந்தாலோ, உடனடியாக நயாகரா பொலிஸாரைத் தொடர்புகொண்டு தகவல் அளிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.