கனடாவின் கியூபெக் மாகாணத்தில், சமூக வலைதளங்களில் பேசப்படும் ஆபத்தான ‘Lug Nut Challenge’ காரணமாக வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி, மேற்கு கியூபெக்கின் கேன்ட்லி (Cantley) பகுதியில் காரை ஓட்டிச் சென்ற பெண் ஒருவர், சக்கரங்களில் வழக்கத்திற்கு மாறான அதிர்வை உணர்ந்துள்ளார்.
காரை நிறுத்திப் பரிசோதித்தபோது, நான்கு சக்கரங்களில் மூன்றின் நட்டுகள் தளர்த்தப்பட்டிருந்தது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக விபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை.
நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களின் சக்கர நட்டுகளை இரகசியமாகத் தளர்த்தி, அதனை வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதே ‘Lug Nut Challenge’ என அழைக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்துக்கும் குறித்த சவாலுக்கும் தொடர்பிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனினும், அந்தத் தொடர்பு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இவ்வாறான செயல்கள் உயிரிழப்புகளுக்கும் பாரிய விபத்துகளுக்கும் வழிவகுக்கலாம் என்றும், குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடலாம் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
வாகன ஓட்டிகள் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர் சக்கரங்களைச் சரிபார்க்குமாறும், சந்தேகத்திற்கிடமான அதிர்வுகள் அல்லது சத்தங்கள் ஏற்பட்டால் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.