சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் அமைதியை முன்னெடுத்துச் செல்ல பல தசாப்தங்களாக ஆற்றிவரும் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தென்னாப்பிரிக்க சட்ட நிபுணர் நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு 2026 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
நார்வே தலைநகர் ஓஸ்லோவில் இன்று, அக்டோபர் 9 ஆம் தேதி, இந்த அறிவிப்பை வெளியிட்ட நார்வே நோபல் குழு, “அமைதி மற்றும் சர்வதேச சட்டத்தை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக” நவி பிள்ளை இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் இந்தியத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தில் 1941 ஆம் ஆண்டு பிறந்த நவநீதம் பிள்ளை, இனவெறி ஆட்சி நிலவிய காலகட்டத்தில் வளர்ந்தவர். நிறப் பாகுபாடு மற்றும் சமூக ஒதுக்குமுறைகளை நேரடியாக எதிர்கொண்ட அவர், பின்னர் சட்டத்துறையைத் தேர்ந்தெடுத்து மனித உரிமைகள் மற்றும் நீதிக்கான போராட்டத்தில் முக்கிய குரலாக உருவெடுத்தார்.
இனவெறி ஆட்சிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா உள்ளிட்ட செயற்பாட்டாளர்களின் உரிமைகளுக்காகவும் அவர் சட்டரீதியாக வாதாடியுள்ளார். பின்னர் தென்னாப்பிரிக்க உயர் நீதிமன்றத்தின் முதல் வெள்ளையரல்லாத பெண் நீதிபதியாகவும் அவர் வரலாறு படைத்தார். Reuters
அதன் பின்னர் சர்வதேச அளவிலும் முக்கிய பொறுப்புகளை வகித்த நவி பிள்ளை, ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றினார். 2008 முதல் 2014 வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையாளராகவும் அவர் பதவி வகித்தார். Reuters
சட்டத்தின் ஆட்சி, சர்வதேச குற்றவியல் நீதி மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் அவரது நீண்டகால அர்ப்பணிப்பை நோபல் குழு பாராட்டியுள்ளது. இனவெறிக்கு எதிரான அவரது ஆரம்பகால சட்டப் போராட்டம் முதல் உலகின் முக்கிய சர்வதேச நீதித்துறை அமைப்புகளில் அவர் ஆற்றிய பணிகள் வரை, ஒரே தொடர்ச்சியான நீதிக்கான அர்ப்பணிப்பு காணப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
85 வயதான நவி பிள்ளைக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படுவது, உலகளாவிய மனித உரிமை மற்றும் சர்வதேச நீதித்துறைக்கான முக்கிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது. பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் 10 ஆம் தேதி ஓஸ்லோவில் நடைபெறவுள்ளது.
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உலகின் மிக உயரிய சர்வதேச அங்கீகாரங்களில் ஒன்றான நோபல் அமைதிப் பரிசைப் பெறுவது, உலகெங்கும் வாழும் தமிழர்களிடையேயும் பெருமையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.