2026 ஆம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு, கனடியக் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான Anne Carsonக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வியல் இலக்கிய மரபுகளுடன் புதுமையான முறையில் உரையாடி, சமகால இலக்கியத்திற்கு புதிய வடிவங்களை உருவாக்கிய அவரது துணிச்சலான மற்றும் படைப்பாற்றல் மிக்க இலக்கியப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுவதாக சுவீடிஷ் அகாடமி தெரிவித்துள்ளது.
1950 ஆம் ஆண்டு ரொரன்ரோவில் பிறந்த Anne Carson, கவிதை, உரைநடை, கட்டுரை, நாடகம் மற்றும் மொழிபெயர்ப்பு உள்ளிட்ட பல்வேறு இலக்கிய வடிவங்களை ஒன்றிணைத்து எழுதுவதில் தனித்துவம் பெற்றவர்.
குறிப்பாக பண்டைய கிரேக்க இலக்கியங்கள் மற்றும் செவ்வியல் மரபுகள் அவரது படைப்புகளில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. Autobiography of Red, Eros the Bittersweet, The Beauty of the Husband, Nox உள்ளிட்ட பல படைப்புகள் உலகளவில் இலக்கிய விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளன.
Anne Carson தனது வாழ்நாள் முழுவதும் கவிதை எழுதுவதோடு, மொழிபெயர்ப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் செவ்வியல் இலக்கியம் மற்றும் மொழி தொடர்பான கற்பித்தல் பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.
அவரது படைப்புகளில் சொற்களின் பொருள், அவற்றின் தோற்றம் மற்றும் காலப்போக்கில் அவை பெறும் புதிய அர்த்தங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. குறிப்பாக சொற்களின் தோற்றவியல் – Etymology தனது எழுத்துப் பணிகளுக்கான முக்கிய தொடக்கப் புள்ளிகளில் ஒன்றாக இருப்பதாகவும் Carson குறிப்பிட்டுள்ளார்.
கவிதை, உரைநடை மற்றும் மொழிபெயர்ப்பு ஆகியவற்றின் வழக்கமான எல்லைகளை உடைத்து புதிய இலக்கிய வடிவங்களை உருவாக்கியவர் என்ற வகையில் Anne Carson நவீன ஆங்கில இலக்கியத்தில் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இந்த ஆண்டுக்கான நோபல் இலக்கியப் பரிசுடன் 12 மில்லியன் சுவீடிஷ் குரோனர் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.