அமெரிக்காவுடன் நிலவும் கடும் வர்த்தகப் பதற்றத்துக்கு மத்தியில், கனடா ஐரோப்பிய ஒன்றியத்துடன் முன்னெப்போதும் இல்லாத வகையிலான உத்திசார் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் கனடா மீது வர்த்தக அழுத்தங்களை அதிகரித்து வருவதுடன், கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மற்றும் வாகன உதிரிபாகங்களுக்கு புதிய வரிகளை விதிக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை
இந்த நிலையில், கனடா தனது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை பல்வகைப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றது.
கனடா, ஐரோப்பிய ஒன்றியத்தின் முழு உறுப்பினராக இணையப் போவதில்லை என பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக, இரு தரப்புக்கும் இடையே விசேட உத்திசார் கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, எரிசக்தி மற்றும் முக்கியத் தாதுக்கள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதும், தொழிலாளர்கள் மற்றும் சேவைகள் எல்லைகளை கடந்து செல்வதற்கான தடைகளை குறைப்பதும் இந்த கூட்டணியின் முக்கிய நோக்கங்களாகவுள்ளன.
மேலும், கடலுக்கு அடியில் தகவல் தொடர்பு கேபிள்களை அமைத்தல், பிரமாண்ட தரவு மையங்களை இணைந்து உருவாக்குதல் உள்ளிட்ட திட்டங்களும் பரிசீலிக்கப்படுகின்றன. கனடா குடிமக்கள் ஐரோப்பாவில் விசா இன்றி வாழவும் பணியாற்றவும் வாய்ப்பளிப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கூட்டணியை இறுதி செய்வதற்காக கனடா பிரதமர் மார்க் கார்னி அடுத்த வாரம் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அப்போது ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். எனினும், இத்தகைய ஒப்பந்தத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் சில உறுப்பு நாடுகளில் உள்ளூர் அரசியல் எதிர்ப்புகள் எழலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.





Comments are closed, but trackbacks and pingbacks are open.