கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், அரிய வகை பொக்கிமான் (Pokémon) அட்டை ஒன்றை சுமார் 935,000 கனடிய டொலர்களுக்கு வாங்கிய வர்த்தகர், அதன் தரச்சான்று போலியானது என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
ரிச்மண்ட் பகுதியைச் சேர்ந்த வர்த்தகரும் பொக்கிமான் அட்டை சேகரிப்பாளருமான ஜெஸ்ஸி பெங் (Jesse Peng), தனது மனைவியுடன் இணைந்து பொக்கிமான் அட்டை விற்பனை நிலையமொன்றை நடத்தி வருகின்றார்.
பல ஆண்டுகளாகத் தேடிவந்த அரிய வகை ‘Call of Legends Shiny Rayquaza’ அட்டையை, PSA நிறுவனத்தின் மிக உயர்ந்த தரச்சான்றான ‘PSA 10’ உடன் பெறுவதற்காக, தரகர் ஒருவர் ஊடாக 660,000 அமெரிக்க டொலர்களை (சுமார் 935,000 கனடிய டொலர்கள்) கிரிப்டோகரன்சி மூலம் செலுத்தியுள்ளார்.
அட்டை கூரியர் மூலம் கிடைத்தபோது உண்மையானதாகத் தோன்றிய போதிலும், அதனை உன்னிப்பாகப் பரிசோதித்தபோது அதன் தரச்சான்று லேபிளில் சந்தேகத்திற்கிடமான அம்சங்களை அவர் கண்டறிந்துள்ளார்.
இதனையடுத்து, தனது தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிவரும் போலிப் பொருட்களைக் கண்டறியும் மென்பொருள் மூலம் பரிசோதித்தபோது, அது போலியானது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பின்னர் PSA நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட அட்டையைப் பரிசோதித்த அதிகாரிகள், அதன் பாதுகாப்பு உறையும் தரச்சான்று அடையாளமும் போலியானவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அட்டையே உண்மையானதாக இருக்கலாம் என்றாலும், அதற்கு உண்மையான ‘PSA 10’ தரச்சான்று வழங்கப்படவில்லை என்பதால் அதன் சந்தை மதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.
இந்தச் சம்பவம் தனக்குப் பெரும் அதிர்ச்சியையும் நிதி இழப்பையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள ஜெஸ்ஸி பெங், பணத்தை மீட்பதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகக் கூறியுள்ளார்.
மேலும், அதிக மதிப்புள்ள சேகரிப்புப் பொருட்களை வாங்கும்போது, தரகர்களின் நற்பெயரை மட்டும் நம்பாமல், அவற்றின் உண்மைத்தன்மையைச் சுயாதீனமாகச் சரிபார்க்குமாறும், முடிந்தவரை கிரிப்டோகரன்சி மூலம் பணம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்தச் சம்பவம், அதிகரித்துவரும் போலிச் சேகரிப்புப் பொருட்கள் மோசடி குறித்து கனடாவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.