தனி மாணவர் குறைந்தபட்சம் $23,448 வாழ்வுச் செலவுக்கான நிதி ஆதாரத்தை நிரூபிக்க வேண்டும்
கனடாவில் கல்வி கற்க விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கான நிதி ஆதாரத் தேவையில் கனடா அரசு மாற்றம் கொண்டுவந்துள்ளது.
செப்டம்பர் 1, 2026 முதல் கனடா Study Permit எனப்படும் கல்வி அனுமதிக்காக விண்ணப்பிக்கும் ஒரு தனி மாணவர், தனது முதலாவது ஆண்டுக்கான வாழ்வுச் செலவுகளை சமாளிக்க குறைந்தபட்சம் 23,448 கனேடிய டொலர்கள் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
இதுவரை, அதாவது 2025 ஜனவரி 1 முதல் 2026 ஆகஸ்ட் 31 வரை, தனி மாணவருக்கான இந்தத் தொகை $22,895 ஆக இருந்தது. செப்டம்பர் 1 முதல் அது $23,448 ஆக அதிகரிக்கிறது.
கல்விக் கட்டணம் இதில் அடங்காது
இந்த $23,448 என்பது கல்விக் கட்டணம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகை மாணவரின் ஒரு வருட வாழ்வுச் செலவுக்கான நிதி ஆதாரமாகும். கல்விக் கட்டணம் மற்றும் கனடாவுக்கு வந்து செல்லும் போக்குவரத்துச் செலவுகள் இந்தத் தொகையில் சேர்க்கப்படவில்லை.
அதாவது, Study Permit விண்ணப்பிக்கும் ஒருவர் தனது:
- கல்விக் கட்டணம்
- கனடாவில் தனது வாழ்வுச் செலவு
- தன்னுடன் வரும் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வுச் செலவு
- கனடாவுக்கு வந்து செல்ல தேவையான போக்குவரத்துச் செலவு
ஆகியவற்றை சமாளிக்க போதுமான நிதி வசதி தன்னிடம் இருப்பதை நிரூபிக்க வேண்டும்.
குடும்பத்தினருடன் வந்தால் எவ்வளவு பணம் தேவை?
செப்டம்பர் 1, 2026 முதல், Quebec தவிர்ந்த கனடாவின் மற்ற மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான ஒரு வருட வாழ்வுச் செலவு நிதித் தேவை பின்வருமாறு:
| மொத்த குடும்ப உறுப்பினர்கள் | தேவையான தொகை |
|---|---|
| 1 நபர் | $23,448 |
| 2 நபர்கள் | $29,192 |
| 3 நபர்கள் | $35,888 |
| 4 நபர்கள் | $43,572 |
| 5 நபர்கள் | $49,419 |
| 6 நபர்கள் | $55,736 |
| 7 நபர்கள் | $62,054 |
7 பேருக்கு மேல் இருந்தால், ஒவ்வொரு மேலதிக குடும்ப உறுப்பினருக்கும் $6,318 கூடுதலாக நிதி ஆதாரம் காட்டப்பட வேண்டும்.
இங்கு குறிப்பிடப்படும் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையில் Study Permit விண்ணப்பிக்கும் மாணவரும் சேர்த்தே கணக்கிடப்படுகிறார்.
உதாரணமாக, ஒரு மாணவர் தனியாக கனடாவுக்கு வந்தால் $23,448 தேவை. மாணவர் தனது கணவர் அல்லது மனைவியுடன் வந்தால் மொத்தம் 2 பேர் என்பதால் $29,192 தேவை. மாணவர் மேலும் இரண்டு குடும்ப உறுப்பினர்களுடன் வந்தால் மொத்தம் 3 பேர் என்பதால் $35,888 வாழ்வுச் செலவுக்கான நிதி ஆதாரமாக நிரூபிக்கப்பட வேண்டும்.
வங்கிக் கணக்கில் பணம் வைத்திருப்பது மட்டுமே வழியல்ல
இந்த முழுத் தொகையையும் குறிப்பிட்ட ஒரு வங்கிக் கணக்கில் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
கனடிய அல்லது வெளிநாட்டு வங்கிக் கணக்கு அறிக்கைகள், Guaranteed Investment Certificate (GIC), கல்விக்கான வங்கிக் கடன், scholarship ஆதாரம், ஏற்கனவே செலுத்தப்பட்ட கல்வி அல்லது தங்குமிடக் கட்டணங்களுக்கான ரசீதுகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் மூலம் போதுமான நிதி வசதி இருப்பதை நிரூபிக்க முடியும்.
IRCC பொதுவாக அண்மைய 6 மாத வங்கிக் கணக்கு அறிக்கைகளையும், பணம் எங்கிருந்து கிடைத்தது என்பதற்கான ஆதாரங்களையும் பரிசீலிக்கலாம்.
கனடா குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமைத் துறையான Immigration, Refugees and Citizenship Canada (IRCC), சர்வதேச மாணவர்கள் கனடாவில் கல்வி கற்கும் காலத்தில் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளாகாமல் தங்களையும் தங்களுடன் வரும் குடும்ப உறுப்பினர்களையும் பராமரிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக இந்த நிதித் தேவைகளை ஆண்டுதோறும் புதுப்பித்து வருகிறது.
குறிப்பு: மேற்கண்ட நிதித் தொகைகள் Quebec மாகாணத்திற்கு பொருந்தாது. Quebec-இல் கல்வி கற்க விரும்புவோருக்கு தனியான நிதி விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன.





Comments are closed, but trackbacks and pingbacks are open.