கனடாவில் ரொறன்ரோ மற்றும் கியுபெக் நகருக்கு இடையே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான மக்கள் சனிக்கிழமை பிற்பகலில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கியுபெக் மாகாணத்தில் ஒட்டாவா மற்றும் மொண்ட்ரியல் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள கிராமப்புற பகுதியான ரிகோவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பெருமளவிலான விவசாயிகள் கலந்துகொண்டு, இத்திட்டம் தங்கள் வாழ்வாதாரத்தையும் விவசாய நிலங்களையும் கடுமையாகப் பாதிக்கும் எனத் தெரிவித்தனர்.
இத்திட்டத்தின் பாதை அமைக்கும் பகுதியில் தனது குடும்பத்தின் 3,000 ஏக்கர் நிலம் உள்ளடங்குவதாகத் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால் அது தங்கள் விவசாய வணிகத்தைப் பேரழிவிற்கு உள்ளாக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இது தேவையற்ற சுற்றிச்செல்லும் பாதைகளையும் கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்தி, எதிர்காலத்தில் விவசாயப் பண்ணைகளின் இயங்குதளத்தையே கேள்விக்குறியாக்கும் என அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ரொறன்ரோ முதல் கியுபெக் வரை ஒட்டாவா, மொண்ட்ரியல், லாவால் மற்றும் துரோவா-ரிவியேர் ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இந்த அதிவேக ரயில் திட்டத்தை ‘ஆல்டோ’ நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இத்திட்டத்தின் முதற்கட்ட பாதை ஒட்டாவா மற்றும் மொண்ட்ரியல் இடையே அமைக்கப்படவுள்ளது.
இது குறித்துப் பேசிய ஆல்டோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், “ரொறன்ரோ-கியுபெக் நகரப் பிராந்தியமானது 1.7 கோடி மக்களைக் கொண்ட கனடாவின் மிகப்பெரிய பொருளாதாரப் பகுதியாகும்.
இது நாட்டின் மக்கள் தொகையில் 41 சதவீதத்தையும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பையும் வழங்குகிறது.
உலகளவில் இத்தகைய பிராந்தியங்களில் அதிவேக ரயில் திட்டங்கள் பெரும் வெற்றியடைந்துள்ளன” எனக் கூறினார். எனினும், இத்திட்டத்தின் நிதிச் செலவு மற்றும் நம்பகத்தன்மை குறித்துப் போராட்டத்தின் போது உரையாற்றியவர்கள் பலத்த சந்தேகங்களை எழுப்பினர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.