Reading Time: < 1 minute

கனடாவின் மனித்தோபா மாகாணத்திலுள்ள Eriksdale பகுதியில் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ள பாம்புகளின் நடமாட்டம் பொதுமக்களுக்கு பெரும் தொல்லையாக மாறியுள்ளது.

Tamil Business Directory

அப்பகுதியில் ஆண்டுதோறும் பாம்புகள் காணப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும், இந்த ஆண்டு நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றனர். வீடுகள், பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது கட்டிடங்கள் என பல இடங்களிலும் Red-sided Garter Snakes அதிகளவில் காணப்படுகின்றன.

Eriksdale Curling Club தலைவர் Larry Weatherburn, கடந்த இரண்டு வாரங்களாக தினமும் கையில் வாளியுடன் பாம்புகளைப் பிடித்து அங்கிருந்து அகற்றிவருவதாக தெரிவித்துள்ளார்.

ஒரே நாளில் Curling Club வளாகத்திலிருந்து மட்டும் சுமார் 30 பாம்புகள் வரை பிடித்துள்ளதாக கூறிய அவர், சில பாம்புகள் பிடிக்க முயற்சிக்கும் போது கடிக்கவும் முயல்வதாக தெரிவித்துள்ளார்.

Eriksdale பகுதியில் நீண்டகாலமாக வசித்து வரும் Weatherburn, ஒவ்வொரு ஆண்டும் பாம்புகளைப் பார்ப்பது வழக்கமானதுதான் என்றாலும், இந்த ஆண்டைப் போல அதிகளவில் இதுவரை பார்த்ததில்லை என தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், Garter Snakes வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவதால், அவற்றை பொதுமக்கள் விருப்பப்படி கொல்ல முடியாது என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மனித்தோபாவின் Interlake பகுதியில் Red-sided Garter Snakes பெருமளவில் வாழ்கின்றன. குறிப்பாக வசந்தகாலம் மற்றும் இலையுதிர் காலங்களில் அவை கூட்டமாக இடம்பெயர்வது இயல்பான நிகழ்வாகும். தற்போது இலையுதிர்கால இடம்பெயர்வு நடைபெற்று வருவதும் பாம்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதற்கான காரணங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.

வெப்பநிலை குறையும் வரை இந்த நிலைமை மேலும் இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நீடிக்கக்கூடும் என Weatherburn எதிர்பார்க்கிறார்.

பாம்புகள் வீடுகளின் அருகே தங்குவதைத் தடுப்பதற்காக, வீடுகளின் அஸ்திபாரங்களில் உள்ள பிளவுகளை அடைத்தல், புல்வெளிகளை குறுகியதாக வெட்டிவைத்தல் மற்றும் குப்பை அல்லது மரக்குவியல்களை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Red-sided Garter Snake பெண் பாம்புகள் முட்டையிடாமல் நேரடியாக குட்டிகளை ஈனக்கூடியவை. பொதுவாக ஒரு தடவையில் சுமார் 20 குட்டிகள் பிறக்கக்கூடிய நிலையில், மனித்தோபாவில் சில பாம்புகள் 40 முதல் 50 குட்டிகள் வரை ஈன்ற சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.