பெல்ஜியத்தில் உள்ள நேட்டோ இராணுவ அமைப்பின் தலைமை அலுவலகத்தில் பயிற்சி ஊழியராக பணியாற்றி வந்த கனடா நாட்டுப் பெண் ஒருவர், உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேட்டோவின் பாதுகாப்புப் பிரிவு அளித்த ரகசியத் தகவலின் அடிப்படையில், பெல்ஜியம் இராணுவ உளவுத்துறையும் காவல்துறையும் இணைந்து இந்த விசாரணையைத் தொடங்கின. கைது செய்யப்பட்ட நபர் சீன வம்சாவளியைக் கொண்ட கனடா நாட்டவர் என பெல்ஜியம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
சந்தேக நநபரின் வீடு மற்றும் நேட்டோ தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது பணி இடத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது. சோதனையைத் தொடர்ந்து அந்தப் பெண் அதிகாரப்பூர்வமாகக் கைது செய்யப்பட்டார்.
மூன்றாம் நாடு ஒன்றிற்காக உளவு பார்த்தல் மற்றும் சட்டவிரோத குற்றவியல் அமைப்பில் உறுப்பினராக இருத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் பெல்ஜியத்தின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மான்ஸ் நகரில் அமைந்துள்ள நேட்டோவின் ‘ஐரோப்பிய கூட்டுப் படைகளின் மூலோபாயத் தலைமை அலுவலகத்தில்’ (SHAPE) நடைபெற்றுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சு வழக்கு விசாரணை நிலுவையில் இருப்பதாகக் கூறியுள்ளது.
எனினும், கனடாவின் உளவுத்துறை மற்றும் சட்ட அமலாக்க முகமைகள் சர்வதேச கூட்டாளிகளுடன் இணைந்து இத்தகைய அச்சுறுத்தல்களைக் கையாண்டு வருவதாக அதன் செய்தித் தொடர்பாளர் மார்கோ போயில் உறுதி அளித்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.