Reading Time: < 1 minute

கனடாவின் அஜாக்ஸ் பகுதியில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நிறைந்திருந்த பூங்காவிற்குள் ஆபத்தான முறையில் காரைச் செலுத்தி அச்சுறுத்தல் ஏற்படுத்திய 23 வயது இளைஞர் மீது துர்ஹாம் பிராந்திய பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tamil Business Directory

கடந்த ஜூலை 18 அன்று மாலை 6:30 மணியளவில், ‘லேக் டிரைவ்வே வெஸ்ட்’ பகுதியில் உள்ள ‘ரோட்டரி பூங்காவில்’ வெள்ளை நிற டொயோட்டா ரக கார் ஒன்று ஆபத்தான முறையில் இயக்கப்படுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சிறுமிகள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் நடமாடிக் கொண்டிருந்த விளையாட்டுக் களம், நீர் விளையாட்டுக் களம் மற்றும் நடைபாதைகளின் வழியே அந்த கார் வேகமாகச் செலுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சம்பவ இடத்தை விட்டுச் சென்ற அந்த காரை, பூங்காவிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் ‘வெஸ்ட்னி வீதி தெற்கு’ மற்றும் ‘பேலி வீதி மேற்கு’ பகுதியில் கண்டறிந்த பொலிஸார் அதை நிறுத்த முயன்றனர்.

ஆனால், காரை ஓட்டிவந்த நபர் பொலிஸாரிடமிருந்து தப்பித்து, மீண்டும் அதே பூங்காவிற்குச் சென்று பாதசாரிகள் செல்லும் பாலத்தின் வழியே காரைச் செலுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ‘ஹார்வுட் அவென்யூ தெற்கு’ மற்றும் ‘பேலி வீதி கிழக்கு’ பகுதியில் அந்த காரை பொலிஸார் மறிக்க முயன்றபோது, அவர் மீண்டும் தப்பிக்க முயன்று அருகிலிருந்த ஜி.எம்.சீ ரக வாகனம் மீது மோதியுள்ளார்.

உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் அவரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கைது செய்யப்பட்டவர் அரோரா பகுதியைச் சேர்ந்த 23 வயதான இஸ்மாயில் அப்ராஹிம்சாதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் பொலிஸாரின் உத்தரவை மீறி வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோட முயன்றமை ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.