பிள்ளைகளுக்கு மின்சார ஸ்கூட்டர்களை (E-Scooters) பரிசாக வாங்கிக் கொடுப்பதற்கு முன் பெற்றோர்கள் பலமுறை சிந்திக்க வேண்டும் என டொராண்டோ காவல்துறைத் தலைவர் மைரன் டெம்கிவ் (Myron Demkiw) எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மின்சார ஸ்கூட்டர்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பு அபாயங்கள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
டொராண்டோவில் சாலைகள், நடைபாதைகள் மற்றும் சைக்கிள் பாதைகள் உள்ளிட்ட எந்தவொரு பொதுப் பகுதியிலும் இ-ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு அனுமதி இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சில மின்சார ஸ்கூட்டர்கள் மிக அதிக வேகத்தில் செல்லக்கூடியவை என்பதால், அவற்றின் ஆபத்துகள் குறித்து பாடசாலைகளிலும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த கோடைக்காலத்தில் டொராண்டோ காவல்துறையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையில், மின்சார ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட சிறிய போக்குவரத்து சாதனங்கள் தொடர்பான விதிமீறல்களுக்காக மொத்தம் 324 அபராதச் சீட்டுகளும் எச்சரிக்கைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இ-ஸ்கூட்டர் விபத்துகளால் காயமடையும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக டொராண்டோ SickKids மருத்துவமனையின் அவசர சிகிச்சை மருத்துவர் டேனியல் ரோசன்ஃபீல்ட் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 10 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தலையில் பலத்த காயங்கள், எலும்பு முறிவுகள் உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
SickKids மருத்துவமனையில் 2023ஆம் ஆண்டு 26 ஆக இருந்த இ-ஸ்கூட்டர் தொடர்பான காயச் சம்பவங்கள், 2025ஆம் ஆண்டில் 107 ஆக அதிகரித்துள்ளன.
இ-ஸ்கூட்டர்கள் விளையாட்டுப் பொருட்கள் அல்ல. எனவே பிள்ளைகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு பெற்றோர்கள் பொறுப்புடன் முடிவெடுக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.