Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து ரிச்மண்ட்-பிரிட்ஜ்போர்ட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தெரசா வாட் விலகியுள்ளார்.

Tamil Business Directory

கட்சியின் புதிய தலைவரான கெர்ரி-லின் ஃபைண்ட்லே தனக்கெதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாகவும், கனடா நாட்டிற்கான தனது விசுவாசத்தைக் கேள்விக்குள்ளாக்கியதாகவும் கூறி அவர் கட்சியிலிருந்து வெளியேறி சுயேச்சை உறுப்பினராக இயங்க முடிவு செய்துள்ளார்.

இந்த மாதத்தில் மட்டும் ஃபைண்ட்லேவின் தலைமையின் கீழ் அக்கட்சியிலிருந்து வெளியேறும் 4-வது சட்டமன்ற உறுப்பினர் இவர் ஆவர்.

தனது விலகல் குறித்துப் பேசிய தெரசா வாட், “எனது நாட்டின் மீதான விசுவாசத்தை எவ்வித ஆதாரமும் இன்றி கேள்விக்குள்ளாக்கிய ஒருவரின் தலைமையில் இயங்கும் கட்சியில் என்னால் தொடர்ந்து நீடிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தலைவரிடமிருந்து மன்னிப்பும் விளக்கமும் அளிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட போதிலும், அது நிறைவேற்றப்படாததால் தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைச் சரிசெய்யவே இக்கடினமான முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை அன்று கட்சியின் கொறடாவாக இருந்த ரோசலின் பேர்ட் விலகிய நிலையில், அடுத்த சில மணிநேரங்களிலேயே தெரசா வாட்டின் விலகல் அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இதற்கு சில தினங்களுக்கு முன்பு இயன் பேட்டன் மற்றும் பீட்டர் மிலோபார் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கவுள்ளதாக அறிவித்திருந்தனர்.

கடந்த 2024 மாகாணத் தேர்தலில் 44 இடங்களைக் கைப்பற்றி ஆட்சிக்கு அருகில் வந்த கன்சர்வேடிவ் கூட்டணி, தற்போது உட்கட்சிப் பூசல்களால் 33 உறுப்பினர்களாகக் குறைந்து பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.

கடந்த மே மாதம் கெர்ரி-லின் ஃபைண்ட்லே தலைவராகப் பொறுப்பேற்றதில் இருந்து கட்சியின் முன்னாள் உயர் நிர்வாகிகள் பலரும் வெளியேறியுள்ளனர்.

மக்கள் விரும்பும் ஒரு மாற்று அரசை உருவாக்காமல், பிரிவினையைத் தூண்டும் பாதையில் கட்சி செல்வதாகவும், புதிய தலைமையின் கீழ் கன்சர்வேடிவ் கட்சி சரியான பாதையில் செல்லவில்லை என்றும் தெரசா வாட் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.