கனடாவின் ஒஷாவா எக்சிகியூட்டிவ் விமான நிலையத்திலிருந்து சிறிய ரக விமானத்தில் புறப்பட்டுச் சென்று காணாமல்போன விமானியைக் கண்டுபிடிக்க தர்ஹாம் பிராந்திய பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை 8:30 மணியளவில் 73 வயதான டேவிட் என்ற அனுபவமிக்க விமானி இந்த விமானத்தை ஓட்டிச் சென்றுள்ளார்.
பொலிஸார் இவரது முழுப் பெயரையும் வெளியிடாத போதிலும், குடும்பத்தினர் சார்பில் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் அவர் ‘டேவிட் டக்ளஸ்’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஒற்றை என்ஜின் கொண்ட, சொந்தமாக தயாரிக்கப்பட்ட விமானத்தில் புறப்பட்ட அவர், காலை 9:30 மணிக்கு மீண்டும் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது.
வெள்ளிக்கிழமை காலையில் அந்தப் பகுதியில் தாழ்வாகப் பறந்த இலகுரக விமானத்தைக் கண்டவர்கள் அல்லது அதன் சத்தத்தைக் கேட்டவர்கள் உடனடியாகத் தகவல் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேவிட் 5 அடி 7 அங்குல உயரமும், மெலிந்த உடல்வாகையும் கொண்டவர். கருப்பு மற்றும் சாம்பல் நிற தலைமுடியும், மீசையும் உடையவர். நீலம் மற்றும் மஞ்சள் நிறங்கள் கொண்ட, ஒற்றை என்ஜின் கொண்ட சொந்தமாக தயாரித்த விமானமாகும்.
டேவிட் வழக்கமாக கவர்தா லேக்ஸ் நகரத்திற்குத் தெற்கேயும், ஸ்குகாக் ஏரிக்கு வடக்கேயும் உள்ள பகுதிகளில் பறப்பார்.
எனினும், இந்த விமானத்தின் கடைசி இருப்பிடம் பால்சம் ஏரியைச் சுற்றி இருந்ததாகக் கருதப்படுகிறது என தர்ஹாம் பிராந்திய பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.
காணாமல்போன நபரைக் கண்டுபிடிக்கும் தேடுதல் பணியில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் மற்றும் ட்ரென்டன் கூட்டமைப்பின் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் ஆகியவை இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த நபர் இருக்கும் இடம் குறித்து தகவல் அறிந்தவர்கள் அல்லது தொடர்புடைய பிற தகவல்கள் வைத்திருப்பவர்கள், உடனடியாக உள்ளூர் பொலிஸாரையோ அல்லது தர்ஹாம் பொலிஸின் மத்திய மேற்குப் பிரிவு குற்றப் புலனாய்வுக் கிளையையோ 1-888-579-1520 (ext. 1805) என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.