கனடா–அமெரிக்க எல்லை வழியாக பெருமளவில் போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லொறி சாரதிகள் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எல்லை வழியாக இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் தொடர்பில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கனடா பொலிஸார் ‘புராஜக்ட் பே’ என்ற பெயரில் விசாரணை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வந்தனர்.
இந்த விசாரணையின்போது, அமெரிக்கா மற்றும் கனடா இடையே பயணித்த சரக்கு லொறிகளைப் பயன்படுத்தி கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விண்ட்சர், லசாலே, கொரூனா, பிராம்ப்டன், மார்கம் மற்றும் கலேடன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது மொத்தமாக சுமார் 1.7 டன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ககன்தீப் திண்டல், சிம்ரன்ஜித் சிங், கன்வர்பால் குலார், ஜதிந்தர்பால் சிங், ஜஸ்விந்தர் சோஹி, தேஜ்விந்தர் சந்து, ஹர்ஜ்விந்தர் சந்து, தர்மிந்தர் சிங், கன்தீப் தரிவால், மஹப்ரீத் சிங் மற்றும் கரன்தீப் சிங் உள்ளிட்ட இந்திய வம்சாவளியினரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போதைப்பொருள் கடத்தல், போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




