கனடா மாற்றுத்திறனாளிகளுக்கான நலத் திட்டத்திற்கு தகுதியான பயனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளி வரிச் சலுகை பெறும்போது ஏற்படும் மருத்துவச் சான்றிதழ் கட்டணங்களை ஈடுசெய்யும் வகையில், 150 கனடிய டாலர் ஒருமுறை நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் செப்டம்பர் 17 முதல் இந்த நிதியுதவித் தொகை பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாக மத்திய அரச அறிவித்துள்ளது.
அனைவருக்கும் தேவையான உதவிகள் எளிதில் கிடைப்பதை உறுதி செய்யவும், எவரும் கைவிடப்படாத ஒரு கனடாவை உருவாக்கவும் தடைகளை நீக்கி வருகிறோம் என வேலைவாய்ப்பு மற்றும் குடும்பங்கள் நலத்துறை அமைச்சர் பட்டி ஹஜ்டு தெரிவித்துள்ளார்.
இந்த 150 டொலர் நிதியுதவியைப் பெறப் பயனாளிகள் தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. தகுதி நிலைக்கு ஏற்ப நேரடியாகவே வழங்கப்படும்.
ஜூலை 2025 முதல் ஜூலை 2026 வரையிலான காலக்கட்டத்தில் இத்திட்டத்திற்குத் தகுதியானவர்கள் வரும் செப்டம்பர் 17 அன்று இத்தொகையைப் பெறுவார்கள்.
ஜூலை 2027-க்குப் பிறகு தகுதிபெறுபவர்கள் மற்றும் புதிய சான்றிதழ் ஒப்புதல் பெற்றவர்களுக்கு 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இத்தொகை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் முழுத் தொகையையும் ஒரே தவணையில் பெற்றவர்கள், கடந்த காலத்தில் பயனடைந்தவர்கள் மற்றும் தற்போது இத்திட்டத்திற்குத் தகுதி பெறாத நிலைக்கு மாறியவர்களுக்கும் கூட இந்த 150 கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும்.
கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் நிதி ஆதரவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும், நிதி வழங்குவதில் தாமதம் மற்றும் சிக்கலான விண்ணப்ப நடைமுறைகள் காரணமாகப் பயனாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் இருந்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன.





Comments are closed, but trackbacks and pingbacks are open.