கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில், கடமை நேரத்தில் தீவிர மதுபோதையில் கைத்துப்பாக்கியுடன் பொலிஸ் ரோந்து வாகனத்தை ஓட்டிச் சென்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஒன்ராறியோ மாகாண பொலிஸ் சேவையில் 17 ஆண்டுகள் பணியாற்றிய 40 வயதான கிறிஸ்டோபர் புரூட் என்பவரே இவ்வாறு தண்டனை பெற்றுள்ளார்.
கடந்த ஜனவரி மாதம், தனது வீட்டில் மது அருந்திய பின்னர், இடுப்பில் கைத்துப்பாக்கியுடன் பொலிஸ் ரோந்து வாகனத்தை ஓட்டிச் சென்ற அவர், மிட்லேண்டில் உள்ள South Georgian Bay பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற பணி மதிப்பீட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட சக பொலிஸ் அதிகாரிகள், கிறிஸ்டோபரிடமிருந்து மது மணம் வீசியதை கவனித்துள்ளனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்ட அளவை விட மூன்று மடங்குக்கும் அதிகமான அளவில் அவரது உடலில் மது இருந்தது உறுதி செய்யப்பட்டது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொலிஸ் அதிகாரி ஒருவர், கடமை நேரத்தில் சீருடையுடனும் கைத்துப்பாக்கியுடனும் இத்தகைய ஆபத்தான செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கை விசாரித்த நீதிபதி எட்வர்ட் புருட்சியி, கிறிஸ்டோபரின் செயலைக் கடுமையாக விமர்சித்தார்.
அவரது பொறுப்பற்ற செயலால் அவருக்கோ அல்லது வீதியில் பயணித்த மற்றவர்களுக்கோ உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய பெரும் விபத்து நேராமல் தவிர்க்கப்பட்டது வெறும் அதிர்ஷ்டம் என நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த வழக்கில் கிறிஸ்டோபருக்கு 3,000 டொலர் அபராதம் விதிக்கப்பட்டதுடன், இரண்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகள் நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் இருக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிறிஸ்டோபரின் தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் வாதிடுகையில், நீண்டகால பொலிஸ் பணியின்போது கண்ட பல கொடூரமான சம்பவங்களின் தாக்கத்தால் அவர் அதிர்ச்சிக்குப் பிந்தைய மன உளைச்சலால் பாதிக்கப்பட்டதாகவும், அதன் பின்னணியில் மதுப் பழக்கம் தீவிரமடைந்ததாகவும் தெரிவித்தார்.
நீதிமன்றத்தில் உரையாற்றிய கிறிஸ்டோபர், தனது செயலுக்காக வெட்கப்படுவதாகவும், தனது பொலிஸ் குழுவுக்கும் சேவைக்கும் ஏற்பட்ட களங்கம் குறித்து ஆழ்ந்த மனவருத்தம் அடைவதாகவும் தெரிவித்தார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.