நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவுமிக்க வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட கனடியர்களுக்கு உதவுவதற்காகக் கனடிய கூட்டாட்சி அரசாங்கத்தின் 10 அதிகாரிகள் களமிறக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கனடிய அரச பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட இந்த அதிகாரிகள், காணாமல் போன கனடியர்களைக் கண்டுபிடிப்பதற்கும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதற்கும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் என அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நேபாளம் மற்றும் சீனா இடையிலான இமயமலை எல்லைப் பகுதியில் பனிப்பாறை ஒன்று சரிந்து விழுந்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் இதுவரை சுமார் 800 பேர் உயிரிழந்துள்ளதுடன், கிட்டத்தட்ட 3,000 பேர் காணாமல் போயுள்ளனர்.
இச்சம்பவத்தில் முன்னதாகத் தொடர்பை இழந்திருந்த கனடியர் ஒருவர் பாதுகாப்பாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்திருந்தார்.
எனினும், மேலும் 30 கனடியர்கள் மற்றும் நிரந்தர வசிப்பாளர்கள் இன்னமும் காணாமல் போயுள்ளதாகவும், கூடுதல் தகவல்கள் கிடைக்கும்போது இந்த எண்ணிக்கை மாறக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அவசர மனிதநேய உதவியாக 5 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு கனடிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.