Reading Time: < 1 minute

கனடாவின் அல்பெர்ட்டா மாகாணத் தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்ட சிறப்புத் தபால் வாக்குச் சீட்டுகளில் ஏற்பட்ட தவறுகள் மற்றும் குழப்பங்களுக்காக மின்னஞ்சல் மூலம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

Tamil Business Directory

வாக்காளர்களுக்கு அனுப்பப்பட்ட வாக்குச் சீட்டுகளில், பொய் வாக்குமூலம் அளித்தால் 50,000 டொலர் வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையுடன் கூடிய சுயபிரகடனப் படிவம் இடம்பெற்றிருந்தது.

வாக்காளர்கள் அந்த குறிப்பிட்ட வாசகத்தைக் கோடு போட்டு நீக்கிவிட்டு படிவத்தின் மற்ற பகுதிகளைப் பூர்த்தி செய்து அனுப்பலாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நேரில் பெறப்பட்ட வாக்குச் சீட்டுகளில் இந்த வாசகம் இடம்பெறவில்லை. தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ள ஆணையம், புதிய படிவத்தைப் பெற 1.877.422.VOTE (8683) என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் அக்டோபர் 19 அன்று நடைபெறவுள்ள மாகாணத் தேர்தலை முன்னிட்டு, இதுவரை 2,90,000-க்கும் மேற்பட்ட சிறப்புத் தபால் வாக்குச் சீட்டுகளுக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன.

இது 2023 தேர்தலில் பெறப்பட்டதை விட கிட்டத்தட்ட 5 மடங்கு அதிகமாகும். அதேசமயம், சில வாக்காளர்களுக்கு வந்த பொதிகளில் ‘அல்பெர்ட்டா பிரிவினை’ தொடர்பான 10-ஆவது கருத்துக் கணிப்பு கேள்வி உள்ளிட்ட சில பக்கங்கள் விடுபட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

மிகச் குறைந்த எண்ணிக்கையிலான மக்களுக்கே இவ்வாறு நேர்ந்துள்ளதாகத் தெரிவித்த தேர்தல் ஆணையத் துணை அதிகாரி டாலஸ் ஸ்டோஸ், விடுபட்ட வாக்குச் சீட்டுகளைக் கொண்டவர்கள் உடனடியாக ஆணையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த தெளிவுபடுத்தல் நல்ல தொடக்கம் என்றாலும், வாக்காளர்களுக்கு மேலும் தெளிவளிக்க இரண்டாம் கட்ட அறிவிப்புக் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என எதிர்க்கட்சியான எண்டிபி கட்சி சட்டமன்ற உறுப்பினர் கிறிஸ்டினா கிரே வலியுறுத்தியுள்ளார்.

அதிக தேவையின் காரணமாக, சிறப்பு வாக்குச் சீட்டுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் அக்டோபர் 9-லிருந்து செப்டம்பர் 25-ஆக முன்னகர்த்தப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அக்டோபர் 9 என அறிவித்துவிட்டு தற்போது செப்டம்பர் 25 எனக் கெடுவை மாற்றியது செய்திகளைத் தொடர்ந்து கவனிக்காத மக்களுக்குப் பெரும் குழப்பத்தையும் அநீதியையும் ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர் லோரி வில்லியம்ஸ் எச்சரித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.