Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள விஸ்லர் பகுதிக்கு அருகே, வெள்ளிக்கிழமை அன்று மலையேறிக் கொண்டிருந்த குழுவினர் மீது கரடி தாக்குதல் நடத்தியதில், பெண் ஒருவர் காயமடைந்தார். அவர் ஹெலிகாப்டர் மூலம் அவசரமாக மீட்புக் குழுவினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

Tamil Business Directory

பிரிட்டிஷ் கொலம்பியா வனவிலங்கு பாதுகாப்பு சேவை அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, விஸ்லருக்கு மேற்கே உள்ள காலைஹான் பள்ளத்தாக்கின் ‘கான்ப்ளிக்ட் ஏரி’ பகுதியில் ஒரு குழுவினர் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது இரண்டு கரடிகளை எதிர்கொண்டனர்.

அதில் ஒரு கரடி திடீரென அந்தப் பெண்ணைத் தாக்கியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு அக்கரடி அங்கிருந்து விலகிச் சென்றது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பொலிஸார், மீட்புக் குழுவினர் மற்றும் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் விரைந்தனர்.

காயமடைந்த பெண்ணுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, அப்பகுதியில் காணப்பட்ட ஒரு வளர்ந்த ஆண் கருங்கரடியை வனப்பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

எனினும், அந்தப் பெண்ணைத் தாக்கியது கருங்கரடியா அல்லது ‘கிரிஸ்லி’ வகைக் கரடியா என்பதை அதிகாரிகளால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கான்ப்ளிக்ட் ஏரிப் பகுதி மலையேறும் பாதையை அதிகாரிகள் மூடியுள்ளதுடன், பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.