அமெரிக்கா அறிவித்துள்ள புதிய வர்த்தக வரிகளுக்கு மத்தியில், கனடியர்களின் ஒற்றுமையையும் தேசப்பற்றையும் வெளிப்படுத்தும் வகையில் ஒட்டாவா நகர மண்டபத்தின் வெளிப்புறத்தில் பிரம்மாண்டமான கனடா தேசியக் கொடி காட்சிப்படுத்தப்படுகிறது.
ஒட்டாவா நகர மேயர் மார்க் சட்க்ளிஃப் இந்த நடவடிக்கை குறித்த தகவலை தனது சமூக வலைத்தளப் பதிவில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 18 மாதங்களில் கனடியர்களிடையே தேசப்பற்று குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஒட்டாவா மற்றும் கனடா முழுவதிலுமுள்ள பல வர்த்தக நிறுவனங்களைப் பாதிக்கக்கூடிய அமெரிக்காவின் புதிய வரி அறிவிப்புகளுக்கு மத்தியில், நகரமும் நாடும் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருப்பதை வெளிப்படுத்துவது மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமாக ஜூலை 1ஆம் தேதி கொண்டாடப்படும் கனடா தினத்தின்போது மட்டும் காட்சிப்படுத்தப்படும் பிரம்மாண்ட கனடா கொடியை, மீண்டும் நகர மண்டபத்தின் பக்கவாட்டில் நிறுவுமாறு நகர ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் மேயர் தெரிவித்துள்ளார்.
மேரியன் தேவார் பிளாசாவை நோக்கியுள்ள ஒட்டாவா நகர மண்டபப் பகுதியில் ஜூலை 27ஆம் தேதி முதல் இந்தப் பிரம்மாண்ட மேப்பிள் இலைக் கொடி காட்சிப்படுத்தப்படுகிறது.
“நமது மேப்பிள் இலைக் கொடியை தொடர்ந்து பெருமையுடன் காட்சிப்படுத்துவோம். மேலும் வலிமையான, சுதந்திரமான மற்றும் பொருளாதார ரீதியாக உறுதியான கனடாவைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என மேயர் மார்க் சட்க்ளிஃப் அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வைன், ஹாக்கி மட்டைகள் மற்றும் உபகரணங்கள், சிமெந்து, பால் பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு கூடுதலாக 50 சதவீத வரியை அறிவித்துள்ளார்.
கனடாவின் வர்த்தக நடவடிக்கைகள் அமெரிக்க தயாரிப்புகளுக்கு எதிராகப் பாகுபாடான முறையில் அமைந்துள்ளதாகக் கூறி இந்த வரிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஜூலை 20ஆம் தேதி கையெழுத்திடப்பட்ட இந்த வரி நடவடிக்கைகள், ஆகஸ்ட் 19ஆம் தேதி நடைமுறைக்கு வரவுள்ளன.
எரிசக்திப் பொருட்கள், பொட்டாஷ், மீன்கள் மற்றும் முக்கிய கனிமங்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு இந்தப் புதிய வரிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




