டொராண்டோவைச் சேர்ந்த அண்ணன்–தங்கை இருவர் இணைந்து 75 மில்லியன் டாலர் லோட்டோ மேக்ஸ் ஜாக்பாட் பரிசை வென்று, ஒன்டாரியோ லாட்டரி வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
ஒன்டாரியோ லாட்டரி மற்றும் கேமிங் கார்ப்பரேஷன் (OLG) வெளியிட்ட தகவலின்படி, டொராண்டோவைச் சேர்ந்த Jonathan R. மற்றும் Mylene P. ஆகியோர், 2026 மார்ச் 3 நடைபெற்ற LOTTO MAX குலுக்கலில் 75 மில்லியன் டாலர் பரிசை வென்றுள்ளனர். OLG வரலாற்றில், அண்ணன்–தங்கை இணைந்து இவ்வளவு பெரிய லாட்டரி ஜாக்பாட்டை வெல்வது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்பிறப்புகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இணைந்து லாட்டரி விளையாடி வந்ததாகவும், தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த எண்களைத் தேர்வு செய்து வந்ததாகவும் OLG தெரிவித்துள்ளது.
ஒரு நாள் அதிகாலை, OLG செயலி மூலம் தனது சீட்டைச் சரிபார்த்தபோது தான் வென்றிருப்பதை Jonathan முதலில் கண்டறிந்துள்ளார். ஆரம்பத்தில், தாங்கள் 75,000 டாலர் வென்றதாகவே நினைத்ததாகவும், பின்னர் கண்ணாடி அணிந்து மீண்டும் பார்த்தபோது கூடுதல் பூச்சியங்கள் இருப்பதை உணர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவர் உடனடியாக தனது தங்கை Mylene-ஐ எழுப்பி தகவலை பகிர்ந்துள்ளார். மொபைல் திரையை பார்த்த Mylene-க்கும் முதலில் அது 75,000 டாலர் போலத் தோன்றியதாகவும், பின்னர் பூச்சியங்களை எண்ணிப் பார்த்தபோது அது 75 மில்லியன் டாலர் என்பதை உணர்ந்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த வெற்றி தங்களது குடும்பத்தின் எதிர்காலத்தை மாற்றும் வகையில் அமைந்துள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர். பெற்றோர், துணைவர், குழந்தைகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களை கவனித்துக் கொள்வதே தங்களின் முதன்மை முன்னுரிமை என Jonathan கூறியுள்ளார். குழந்தைகளின் கல்விக்கான செலவுகளை உறுதி செய்வதுடன், குடும்பத்திற்காக பெரிய வீடு ஒன்றை அமைக்க விருப்பம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Mylene, தானும் தனது குடும்பத்திற்காக ஒரு வீட்டை அமைக்க நீண்டகாலமாக கனவு கண்டதாகவும், இப்போது அது நனவாகும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும், குடும்பத்துடன் கனடா முழுவதும் பயணம் செய்வதற்கும், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளதாக OLG தெரிவித்துள்ளது.
இந்த வெற்றி சீட்டு, North York-இல் Drewry Avenue-யில் உள்ள Drewry’s Variety கடையில் வாங்கப்பட்டதாக OLG உறுதிப்படுத்தியுள்ளது.




