றொரண்டோவில் நடைபெற்ற FIFA உலகக் கோப்பை போட்டியின் போது, பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஜெர்மனியில் வசிக்கும் இரு ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடா மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவினா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி றொரண்டோ ஸ்டேடியத்தில் நடைபெற்றது. போட்டி ஆரம்பிக்க முன்னர், பார்வையாளர் பகுதியில் இருந்த ரசிகர்கள் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கலவரத்தில் ஈடுபட்ட ஒருவரை மைதானத்திலிருந்து வெளியேற்ற பொலிஸார் முயன்றபோது, அங்கிருந்த சிலர் பொலிஸாரை நோக்கி பொருட்களை வீசியதாக கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் லேசான காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, போஸ்னிய ரசிகர் குழுவைச் சேர்ந்த ஜெர்மனியில் வசிக்கும் எல்டார் கிராபோவாக் (27) மற்றும் எமிர் கோலிக் (25) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவர்மீதும் பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர்கள் ஜூன் 13, 2026 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகளை பாதுகாப்பாகவும் பொறுப்புடன் ரசிக்குமாறு அதிகாரிகள் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். சட்டத்தை மீறினால், போட்டியை ரசிக்கும் வாய்ப்பை இழந்து சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடா மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவினா அணிகளுக்கிடையிலான போட்டி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.




