ரொரன்றோவின் ஸ்காபரோ பகுதியில் மூன்று பிள்ளைகளை அவர்களது தாயார் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சம்பவத்தில், பயன்படுத்தப்பட்ட வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ரொரன்றோ பொலிசார் தெரிவித்துள்ளனர். எனினும், தாயாரும் மூன்று பிள்ளைகளும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
ரொரன்றோவைச் சேர்ந்த 22 வயதான சோமெர்டா மிக்லெஸ்கு (Somerda Miclescu) என்ற பெண்ணே இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிசாரால் தேடப்பட்டு வருகின்றார்.
இவருக்கு ஆறு வயதான டேனியல் (Daniel), மூன்று வயதான இரினா (Irina), நான்கு மாதக் குழந்தையான அனஸ்டாசியா (Anastasia) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
பிள்ளைகளைப் பராமரிக்கும் சட்டபூர்வ உரிமை சோமெர்டாவுக்கு வழங்கப்படாத நிலையில், குறிப்பிட்ட மேற்பார்வையின் கீழ் அவர்களைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை (ஒக்டோபர் 23), காலை 11.30 மணியளவில், ஸ்காபரோவின் Midland Avenue மற்றும் Eglinton Avenue East பகுதிக்கு அருகிலுள்ள குடும்ப உறுப்பினர் ஒருவரின் வீட்டில் பிள்ளைகளைச் சந்தித்த சோமெர்டா, அங்கிருந்து மூன்று பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு வெளியேறியதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, பிள்ளைகள் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.
சோமெர்டா, வெள்ளை நிற 2017 Ford Expedition வாகனத்தில் சென்றிருக்கலாம் என ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை (ஒக்டோபர் 26) பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
எனினும், வாகனம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது என்ற விவரத்தை பொலிசார் வெளியிடவில்லை. தாயாரும் மூன்று பிள்ளைகளும் எங்கிருக்கின்றார்கள் என்பது இதுவரை தெரியவரவில்லை.
மேலும், வாகனத்தின் உரிமையாளரான ரொரன்றோவைச் சேர்ந்த 25 வயதான Ionut Stroe என்பவரையும் இந்த விசாரணையில் முக்கிய தகவல்களை வழங்கக்கூடிய நபராகப் பொலிசார் அடையாளம் கண்டுள்ளனர்.
தாயாரையும் மூன்று பிள்ளைகளையும் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் ரொரன்றோ பொலிசாரை 416-808-4100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.