கனடாவின் மிகப்பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவங்களில் ஒன்றாகக் கருதப்படும் ரொரன்றோ பியர்சன் சர்வதேச விமான நிலைய கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த Ali Raza மீதான குற்றச்சாட்டை Crown தரப்பு வாபஸ் பெற்றுள்ளது.
ரொரன்றோவைச் சேர்ந்த 40 வயதான Ali Raza, 2023ஆம் ஆண்டு பியர்சன் விமான நிலையத்தில் இடம்பெற்ற பல மில்லியன் டொலர் பெறுமதியான தங்கக் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்டு, குற்றத்தின் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார்.
செப்டம்பர் 16, 2026 அன்று பிராம்ப்டன் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, அவருக்கு எதிரான வழக்கைத் தொடரப்போவதில்லை என Crown தரப்பு அறிவித்தது. புதிய ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். அந்த ஆதாரங்கள் தொடர்பான விபரங்களுக்கு நீதிமன்றத்தின் வெளியீட்டுத் தடை இருப்பதால் அவை தற்போது பகிரங்கப்படுத்தப்படவில்லை.
நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த Ali Raza, தான் ஆரம்பம் முதலே நிரபராதி எனக் கூறி வந்ததாகவும், வழக்கு முடிவுக்கு வந்ததில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்தார். அவரது வழக்கறிஞரும், இந்த வழக்கு Raza-வின் தொழில், நற்பெயர் மற்றும் குடும்ப வாழ்க்கையை பெரிதும் பாதித்ததாகக் கூறியுள்ளார்.
என்ன நடந்தது?
2023ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து ரொரன்றோ பியர்சன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் சுமார் 400 கிலோ எடையுள்ள 6,600 தங்கக் கட்டிகளும், சுமார் 2.5 மில்லியன் கனடிய டொலர் பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் கொண்ட சரக்கு வந்தடைந்தது.
அப்போது அந்த தங்கத்தின் மதிப்பு மட்டும் 20 மில்லியன் டொலர்களுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டது.
விமானத்திலிருந்து இறக்கப்பட்ட சரக்கு, விமான நிலையத்திலுள்ள சரக்கு சேமிப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் போலியான airway bill ஆவணத்தை பயன்படுத்திய ஒருவர் சரக்கைப் பெற்றுக்கொண்டு ட்ரக்கில் எடுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். உண்மையான சரக்கைப் பெற்றுக்கொள்ள வேண்டியவர்கள் பின்னர் வந்தபோதுதான் கொள்ளை இடம்பெற்றிருப்பது தெரியவந்தது.
கனடாவின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய தங்கக் கொள்ளையாக Peel Regional Police இந்தச் சம்பவத்தை வர்ணித்துள்ளது.
இந்த கொள்ளை தொடர்பாக பலர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது Ali Raza மீதான குற்றச்சாட்டும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த Amit Jalota என்பவர் மீதான குற்றச்சாட்டும் செப்டம்பர் 15ஆம் திகதி வாபஸ் பெறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான ஏனைய குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.





Comments are closed, but trackbacks and pingbacks are open.