ரொறன்டோ மற்றும் சிகாகோ விமான நிலையங்களில் சீனாவுக்கு உளவு பார்க்கும் வகையில் புகைப்படங்கள் எடுத்த குற்றச்சாட்டின் பேரில், கனடாவின் ஒன்டாரியோ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் அமெரிக்காவில் எதிர்-உளவுத்துறை விசாரணையின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் பயிலும் சீனக் குடிமகனான வேஹெங் ஜெங் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மிச்சிகன் நீதிமன்றத்தில் எஃப்.பி.ஐ தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, கடந்த ஏப்ரல் மாதம் சிகாகோவின் ஓ’ஹேர் விமான நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத் தொடர்பில் இவர் மீது அதிகாரிகளின் கவனம் திரும்பியது.
ஏப்ரல் 21 அன்று, ஓ’ஹேர் விமான நிலையத்தின் ஃபெட்எக்ஸ் சரக்கு மையத்தில் ஒருவர் புகைப்படங்கள் எடுப்பது, ஃபோர்க்லிஃப்ட் வாகனத்தின் மீது ஏறுவது மற்றும் பூட்டப்பட்ட கொள்கலன்களைத் திறக்க முயல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டது கண்காணிப்புக் கேமராவில் பதிவானது.
ஜெங் அம்பாஸடர் பாலம் வழியாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 10 நாட்களில் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒன்டாரியோ பதிவு எண் கொண்ட மினிவான் கார் ஜெங்குடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.
ஆகஸ்ட் 23 அன்று, அதே மினிவான் காரில் ஜெங் மீண்டும் அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றபோது, எல்லைப் பாதுகாப்பு முகவர்களாலும் FBI அதிகாரிகளாலும் தனியாக அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணையின் போது ஜெங் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்ததால், அவர் மீது “பொய்யான தகவல்களைத் தெரிவித்ததாக” வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.