கனடாவில் கடைகளில் பொருட்களைத் திருடும் சம்பவங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளதாக Statistics Canada வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
2025ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 208,941 கடைத்திருட்டு சம்பவங்கள் பொலிஸாரிடம் பதிவாகியுள்ளன. இது ஒரு லட்சம் மக்களுக்கு 502 சம்பவங்கள் என்ற விகிதமாகும். 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த விகிதம் 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடைத்திருட்டு சம்பவங்களின் விகிதம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2015 முதல் 2025 வரையான பத்து ஆண்டு காலப்பகுதியில் கடைத்திருட்டு விகிதம் 79 சதவீதம் உயர்ந்துள்ளதாக Statistics Canada தெரிவித்துள்ளது.
இது கனடாவின் ஒட்டுமொத்த குற்ற நிலவரத்துக்கு மாறான போக்காகவும் அமைந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் கனடாவின் Crime Severity Index சுமார் 5 சதவீதம் குறைந்ததுடன், ஒட்டுமொத்த பொலிஸ் பதிவுசெய்த குற்ற விகிதமும் 2 சதவீதம் குறைந்துள்ளது. இருந்தபோதிலும் கடைத்திருட்டு தொடர்ந்து அதிகரித்து வருவது வர்த்தகத் துறைக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களும் இந்த நிலைமை தொடர்பாக கவலை வெளியிட்டு வருகின்றன. Canadian Federation of Independent Business நடத்திய ஆய்வில், கனடாவிலுள்ள சிறு வணிக உரிமையாளர்களில் 50 சதவீதமானவர்கள் தங்கள் பகுதிகளில் கடந்த ஆண்டில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். பல வர்த்தகர்கள் பாதுகாப்பு கேமராக்கள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கூடுதல் பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
டொராண்டோவிலும் தீவிர நடவடிக்கை
டொராண்டோவிலும் சில்லறை வணிகத் திருட்டு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. Organized Retail Crime Unit என்ற சிறப்புப் பிரிவை Toronto Police உருவாக்கியதிலிருந்து, இதுவரை 546 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4,033 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், அந்த விசாரணைகளுடன் தொடர்புடைய $1.6 மில்லியனுக்கும் அதிகமான திருடப்பட்ட பொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக Toronto Police கடந்த ஆகஸ்ட் 5ஆம் திகதி தெரிவித்துள்ளது.
கடைத்திருட்டு என்பது தனிப்பட்ட கடைகளுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பாக மட்டும் இல்லாமல், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு, பாதுகாப்புச் செலவுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக வணிக அமைப்புகள் எச்சரித்துள்ளன. CFIB, தொடர்ச்சியாக குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள், விரைவான பொலிஸ் பதில் மற்றும் சிறு வணிகங்களுக்கான பாதுகாப்பு ஆதரவுகளை அதிகரிக்குமாறு அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.