கனடாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்படவிருந்த 392 வாகனங்களை மீட்டுள்ளதாக கனேடிய மத்திய காவல்துறையான RCMP அறிவித்துள்ளது.
கனேடிய எல்லை சேவைகள் முகமை, ஏனைய சட்ட அமலாக்க அமைப்புகள் மற்றும் கனேடிய நிதி நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் இந்த வாகனங்கள் துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஓராண்டாக முன்னெடுக்கப்பட்டு வரும் “Project NoCargo” நடவடிக்கையின் கீழ், ஹாலிஃபாக்ஸ், மொன்றியல், ரொறன்ரோ மற்றும் வான்கூவர் பகுதிகளில் சுமார் 28 மில்லியன் டொலர் பெறுமதியான 392 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக RCMP தெரிவித்துள்ளது.
போலியான ஆவணங்கள் மூலம் வாகனக் கடன்கள்
சந்தேகத்திற்குரிய வாகன ஏற்றுமதிகளைக் கண்டறியும் நோக்கில், RCMP மத்திய காவல்துறையின் குற்றவியல் நடவடிக்கைப் பிரிவினால் 2025ஆம் ஆண்டு ஜூன் மாதம் “Project NoCargo” ஆரம்பிக்கப்பட்டது.
INTERPOL Ottawa வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. நாடுகளைக் கடந்து இயங்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள், திருடப்பட்ட அல்லது போலியாகத் தயாரிக்கப்பட்ட தனிநபர் அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனக் கடன்களுக்கு விண்ணப்பித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த வாகனங்களுக்கு காப்புறுதிப் பத்திரங்களைப் பெற்று, பின்னர் காப்புறுதி மோசடிகளில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்தகைய குற்ற நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஆண்டு காப்புறுதி நிறுவனங்களுக்கு சுமார் 900 மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக RCMP குறிப்பிட்டுள்ளது.
கனேடிய எல்லை சேவைகள் முகமை சந்தேகத்திற்குரிய வாகன ஏற்றுமதி வழக்குகளை அடையாளம் கண்டு, மேலதிக விசாரணைக்காக RCMPயிடம் ஒப்படைத்து வருகிறது.
மூன்றில் ஒரு கனேடியர் பாதிப்பு
Équité Association அமைப்பு வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான கனேடிய வாகனத் திருட்டு தாக்க ஆய்வின் பிரகாரம், கனேடியர்களில் மூன்றில் ஒருவருக்கும் அதிகமானோர் வாகனத் திருட்டினால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் திருட்டு முயற்சிகளைத் தாங்கக்கூடிய வகையில் வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன என 18 சதவீதமானவர்கள் மட்டுமே நம்புகின்றனர்.
2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கனடாவில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் 33 சதவீதம் குறைந்துள்ளதாக Équité Association தெரிவித்துள்ளது. வாகனத் திருட்டை எதிர்கொள்ள மத்திய அரசு அறிமுகப்படுத்திய தேசிய நடவடிக்கைத் திட்டமே இதற்கான முக்கிய காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்தி வருவதாக 55 சதவீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
வாகனத் திருட்டை கட்டுப்படுத்த அரசாங்கங்கள், வாகன உற்பத்தியாளர்கள், காவல்துறையினர் மற்றும் வாகன உரிமையாளர்கள் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என மூன்றில் இரண்டு பங்கு கனேடியர்கள் நம்புகின்றனர்.
வாகனங்களிலேயே பாதுகாப்பு வசதிகள் வேண்டும்
வாகனப் பாதுகாப்பு வசதிகள் மேலதிகமாக பணம் செலுத்தி வாங்கக்கூடிய சாதனங்களாக இல்லாமல், வாகனங்களிலேயே பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என 72 சதவீதமான கனேடியர்கள் கருதுவதாக Équité Association அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் தேசிய துணைத் தலைவர் பிரையன் காஸ்ட் தெரிவித்துள்ளார்.
முன்னர் இரும்புக் கம்பிகள் உள்ளிட்ட கருவிகளைப் பயன்படுத்திய குற்றவாளிகள் தற்போது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகனச் சாவியின் மின்னணு சமிக்ஞைகளைப் பிரதியெடுக்கும் “Key Fob Relay” தாக்குதல்கள் மற்றும் வாகனத்தின் பாதுகாப்பு அமைப்பை மீண்டும் நிரலாக்கி செயலிழக்கச் செய்யும் முறைகள் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
ரொறன்ரோவில் 12,170 வாகனத் திருட்டுகள்
ரொறன்ரோவில் 2023ஆம் ஆண்டு மாத்திரம் 12,170 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.
இதன் காரணமாக ரோஸ்டேல் உள்ளிட்ட வசதி படைத்த குடியிருப்புப் பகுதிகளில் சிலர் தனியார் பாதுகாப்புச் சேவைகளைப் பயன்படுத்தியிருந்தனர்.
மேலும், வாகனங்களைச் சுற்றி பாதுகாப்புத் தடுப்பை ஏற்படுத்தும் வகையில் தரையிலிருந்து மேலே எழுப்பக்கூடிய இரும்புத் தூண்களையும் சிலர் பொருத்தியிருந்தனர்.
காப்புறுதி இழப்புகள் குறைந்தாலும் அச்சுறுத்தல் தொடர்கிறது
கனடா காப்புறுதிப் பணியகத்தின் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் வாகனத் திருட்டு தொடர்பான காப்புறுதிக் கோரிக்கைகள் 24 சதவீதம் குறைந்துள்ளன.
காப்புறுதிக் கோரிக்கைகளின் மொத்த பெறுமதி 30 சதவீதம் குறைந்து, வாகனத் திருட்டினால் ஏற்பட்ட இழப்பு 724 மில்லியன் டொலராகப் பதிவாகியுள்ளது.
2024ஆம் ஆண்டில் இந்த இழப்பு ஒரு பில்லியன் டொலருக்கும் அதிகமாக இருந்தது. எனினும், வாகனத் திருட்டால் ஏற்படும் செலவுகள் வரலாற்று சராசரியைவிட இன்னும் அதிகமாகவே உள்ளதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் வாகனத் திருட்டு தொடர்பான காப்புறுதிக் கோரிக்கைகளின் எண்ணிக்கை 38 சதவீதமும், கோரிக்கைகளின் பெறுமதி 169 சதவீதமும் அதிகரித்துள்ளது.
இதனால், வாகனங்களை செயலிழக்கச் செய்யும் பாதுகாப்புத் தரங்களை வலுப்படுத்துதல் மற்றும் துறைமுகங்கள் வழியான வாகன ஏற்றுமதிகளை தீவிரமாகக் கண்காணித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என காப்புறுதிப் பணியகம் கோரியுள்ளது.
மீட்பு விகிதம் குறைவு
ஒன்ராறியோவில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் 22 சதவீதமும், கியூபெக்கில் 25 சதவீதமும் குறைந்துள்ளன.
எனினும், திருடப்பட்ட வாகனங்களில் ஒன்ராறியோவில் 51 சதவீதமும், கியூபெக்கில் 48 சதவீதமும் மாத்திரமே மீட்கப்படுகின்றன.
இந்த இரு மாகாணங்களிலும் திருடப்பட்ட வாகனங்களில் சுமார் பாதியளவு மீட்கப்படவில்லை. அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது சட்டவிரோத வாகன உதிரிப்பாக நிலையங்களில் பிரிக்கப்பட்டிருக்கலாம் என Équité Association தெரிவித்துள்ளது.
மேற்கு கனடாவில் 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் வாகனத் திருட்டுச் சம்பவங்கள் 11 சதவீதம் குறைந்துள்ளன.
இருப்பினும், அல்பேர்ட்டா மாகாணத்தில் வாகன மீட்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. திருடப்பட்ட வாகனங்களின் அடையாள இலக்கங்களை மாற்றி, அவற்றை மீண்டும் பதிவு செய்வதற்கான முக்கிய மாகாணமாக அல்பேர்ட்டா பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை உயர்ந்த வாகனங்களை சரக்குக் கொள்கலன்களில் ஏற்றி வெளிநாடுகளுக்கு அனுப்புதல், போலியான சட்ட ஆவணங்களைத் தயாரித்தல் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபடுதல் போன்றவை தற்போது வாகனத் திருட்டுக் குற்றங்களின் முக்கிய அம்சங்களாக மாறியுள்ளன.





Comments are closed, but trackbacks and pingbacks are open.