ஒன்ராறியோ மாகாணத்தின் நயாகரா பிராந்தியத்தில் பெய்த வரலாறு காணாத கனமழையால், ஆயிரக்கணக்கான வீடுகள், வர்த்தக நிலையங்கள் மற்றும் திராட்சைத் தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஒரே வாரத்தில், இப்பகுதியில் வழக்கமாக ஓராண்டில் பதிவாகும் மழைவீழ்ச்சியின் சுமார் நான்கில் ஒரு பங்கு பெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கனமழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதுடன், சில திராட்சைத் தோட்டங்களில் மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை நீர் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் திராட்சைப் பயிர்களும் மதுபான உற்பத்திக்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களும் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தால் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள் நீர் புகுந்துள்ளதால், பொதுமக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். மீட்புக் குழுவினர் மற்றும் அவசரகாலப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நயாகரா பிராந்தியத்திற்குட்பட்ட செயின்ட் கத்தரின்ஸ் மற்றும் லிங்கன் நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்ற ஒன்ராறியோ முதல்வர் டக் போர்ட், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் மீட்புப் பணியாளர்களையும் சந்தித்து நிலைமைகளைப் பார்வையிட்டார்.
இந்த வெள்ளத்தால் நயாகரா பிராந்தியத்தின் திராட்சை உற்பத்தி மற்றும் மதுபானத் தொழில் கணிசமாகப் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
மேலும், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட சேதங்களைச் சரிசெய்வதற்காக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்ராறியோ மாகாண அரசு நிவாரண உதவிகளை அறிவிக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.