கனடாவின் மொன்றியல் நகரிலுள்ள ‘கோட்-டெஸ்-நைஜஸ்–நோட்டர்-டேம்-டி-கிராஸ்’ பகுதியில் உள்ள மசூதி ஒன்றின் வெளிப்புறப் பகுதி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் தீப்பற்றி எரிந்ததால் சேதமடைந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மொன்றியல் தீயணைப்புத் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில், ‘அவென்யூ டி கோர்ட்ரை’ பகுதியில் அமைந்துள்ள இரண்டு கட்டிடங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டிருந்த டிரக் ஒன்று தீப்பற்றி எரிவதாகத் தீயணைப்புத் துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட பகுதியிலிருந்த இரண்டு கட்டிடங்களில் ஒன்று ‘பைத்துல் முகர்ரம்’ மசூதி ஆகும். சுமார் 50 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தினர்.
வாகனத்தில் பற்றிய தீ, மசூதிக்கு அருகில் இருந்த ஒரு கொள்கலனுக்கும் பரவியது. இதனால் அந்த கொள்கலனும், மசூதியின் வெளிப்புறச் சுவரும் சேதமடைந்தன.
இத்தீவிபத்துக்கான காரணத்தைக் கண்டறியத் தீயணைப்புத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இத்தீவிபத்து சந்தேகத்திற்குரிய ஒன்றாகத் தெரியவில்லை என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.





Comments are closed, but trackbacks and pingbacks are open.