கனடாவின் வடக்குப் பகுதியான ஒன்டாரியோவில் முகாம் அமைத்துத் தங்குவதற்காகச் சென்று வீடு திரும்பாத இருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்டாரியோ மாகாணக் காவல்துறை தெரிவித்து உள்ளது.
கபுஸ்காசிங் கருக்குக் கிழக்கே அமைந்துள்ள குவெனெட் ஏரிக்கு அருகே இந்த இரண்டு திடீர் மரணங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்தச் சம்பவத்தில் ஏதேனும் சதிச் செயல் அல்லது குற்றப் பின்னணி உள்ளதா என்பது குறித்து காவல்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.
சுற்றுலா சென்ற இருவர் வீடு திரும்பவில்லை என்று ஆகஸ்ட் 1-ஆம் திகதி காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
இதையடுத்து அவசரக்கால மீட்புக் குழு, மோப்பநாய் படை, காவல்துறை விமானப் பிரிவு மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகம் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன.
தேடுதலின் முடிவில், ஆகஸ்ட் 2-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இருவரின் உடல்களும் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டன. உயிரிழந்தவர்களின் அடையாளங்களை காவல்துறை இன்னும் வெளியிடவில்லை.
“இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் என்றும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு எந்தப் அச்சுறுத்தலும் இல்லை” என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
உயிரிழப்பிற்கான காரணம் குறித்து தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும், இது தொடர்பான கூடுதல் தகவல்கள் விசாரணக்குப் பின்னரே வெளியாகும் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 2 வரை குவெனெட் ஏரிப் பகுதிக்கு அருகில் இருந்தவர்கள் யாரேனும் சந்தேகத்திற்கிடமான நிகழ்வுகளைக் கண்டிருந்தாலோ, அல்லது அது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் கேமரா பதிவுகள் வைத்திருந்தாலோ உடனடியாகக் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து முதன்மை மரண விசாரணை அதிகாரி அலுவலகத்துடன் இணைந்து குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.