Reading Time: < 1 minute

ரொரன்றோவின் ரெக்ஸ்டேல் பகுதியில் 26 வயதான இளம்பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், பிராம்ப்டனைச் சேர்ந்த 37 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

கடந்த வெள்ளிக்கிழமை, ஜூலை 24ஆம் திகதி காலை சுமார் 7.23 மணியளவில், Humberwood Boulevard மற்றும் Rexdale Boulevard சந்திப்புக்கு அருகிலுள்ள பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக ரொரன்றோ பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணுக்கு உயிர்காப்புச் சிகிச்சைகளை வழங்கினர். எனினும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.

உயிரிழந்தவர் ரொரன்றோவைச் சேர்ந்த 26 வயதான நவ்நீத் கௌர் என பொலிஸார் அடையாளம் வெளியிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் 2026ஆம் ஆண்டில் ரொரன்றோவில் பதிவான 22ஆவது கொலைச் சம்பவமாகும்.

சம்பவத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் சந்தேகநபருக்கும் இடையே சிறிது நேரம் உரையாடல் இடம்பெற்றதாகவும், அதனைத் தொடர்ந்து அந்த நபர் அவரைச் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், ஒன்ராறியோ மாகாண பொலிஸார் சந்தேகநபரைக் கண்டுபிடித்துக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர் பிராம்ப்டனைச் சேர்ந்த ஷார்ன்ஜீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர்மீது முதலாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு மற்றும் நீதிமன்றத்தில் வழங்கிய உறுதிமொழியின் நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டு ஆகியவை பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தத் துப்பாக்கிச் சூடு குறிவைத்து நடத்தப்பட்ட சம்பவம் எனப் பொலிஸார் கருதுகின்றனர். இருப்பினும், உயிரிழந்த பெண்ணுக்கும் கைது செய்யப்பட்ட நபருக்கும் இடையிலான தொடர்பு மற்றும் தாக்குதலுக்கான காரணம் தொடர்பான விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

சம்பவம் தொடர்பான தகவல்கள் அல்லது காணொளிப் பதிவுகள் வைத்திருப்பவர்கள் ரொரன்றோ பொலிஸாரின் கொலை மற்றும் காணாமல்போனோர் விசாரணைப் பிரிவைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.