கனடாவின் டொராண்டோ நகரில் பல தசாப்தங்களாக அடையாளம் தெரியாமல் இருந்த இரண்டு பெண்களின் உடல்கள், நவீன புலனாய்வு மரபியல் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸார் அறிவித்துள்ளனர்.
1995 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த உடல்கள் தொடர்பான விசாரணைகள், “Investigative Genetic Genealogy – IGG” எனப்படும் புலனாய்வு மரபியல் தொழில்நுட்பத்தின் மூலம் முக்கிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
கட்டடத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த பெண்
1995ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி, டொராண்டோவின் டான்ஃபோர்த் அவென்யூ மற்றும் காக்ஸ்வெல் அவென்யூ சந்திப்புக்கு அருகிலிருந்த கட்டடம் ஒன்றை இடித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், நிலத்துக்கடியில் புதைக்கப்பட்டிருந்த பெண் ஒருவரின் எலும்புக்கூட்டை கண்டுபிடித்தனர்.
தடயவியல் பரிசோதனையில், அந்தப் பெண்ணின் தலையில் சுத்தியல் போன்ற கனமான ஆயுதத்தால் குறைந்தது ஆறு முறை தாக்கப்பட்டிருந்ததும், கொல்லப்பட்ட பின்னர் திட்டமிட்டுப் புதைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இச்சம்பவம் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.
உடல் பல ஆண்டுகளாக மண்ணுக்குள் இருந்ததால் டி.என்.ஏ மாதிரிகள் மிகவும் சேதமடைந்திருந்தன. பல தடவைகள் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்குப் பின்னர், 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே விசாரணைக்கு ஏற்ற டி.என்.ஏ மரபியல் விவரத்தை அதிகாரிகளால் பெற்றுக்கொள்ள முடிந்தது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மரபியல் மற்றும் குடும்ப வரலாற்று ஆய்வுகள் மூலம், இறந்தவர் மேரி மக்லியோட் மொஃபட் — பிறப்புப் பெயர் டேவிட்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
1905ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்தின் அபர்டீன்ஷயர் பகுதியில் பிறந்த மேரி, 1913ஆம் ஆண்டு தனது குடும்பத்தினருடன் கனடாவிற்கு குடிபெயர்ந்திருந்தார். வரலாற்றுப் பதிவுகள், உறவினர்களுடனான நேர்காணல்கள் மற்றும் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், அவர் 1936ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் நம்புகின்றனர்.
கணவரே முதன்மை சந்தேகநபர்
மேரியின் கணவரான ஆண்ட்ரூ லோயிட் மொஃபட், அவரைக் கைவிட்ட பின்னர் மேலும் பல திருமணங்களைச் செய்திருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேரியின் உடல் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு அருகிலேயே ஆண்ட்ரூ மொஃபட் வாகன டயர் விற்பனைத் தொழில் ஒன்றை நடத்திவந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அவர் “டிரேக் லோயிட் கம்மிங்ஸ்” என்ற பெயரைப் பயன்படுத்தி அமெரிக்காவிலும் வான்கூவரிலும் வாழ்ந்துள்ளார். அவர் 1985ஆம் ஆண்டு உயிரிழந்துவிட்டதால், தற்போது அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது.
இருப்பினும், மேரி மொஃபட்டின் கொலை தொடர்பான முதன்மை சந்தேகநபராக ஆண்ட்ரூ மொஃபட்டை விசாரணையாளர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்.
நெடுஞ்சாலை 401-இல் எரிந்த காருக்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெண்
இரண்டாவது சம்பவம் 2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22ஆம் திகதி இடம்பெற்றது.
நெடுஞ்சாலை 401-இன் கிழக்குத் திசை கலெக்டர் வழித்தடத்தில், நெடுஞ்சாலை 400 சந்திப்புக்கு அருகில் சென்ற கார் ஒன்று வேண்டுமென்றே டிராக்டர்–டிரெய்லர் வாகனத்தின் மீது மோதிய பின்னர் தீப்பற்றி எரிந்தது.
தீ அணைக்கப்பட்ட பின்னர், காரின் பயணியர் இருக்கையில் கடுமையாக எரிந்த நிலையில் பெண் ஒருவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.
பெட்ரோலைப் பயன்படுத்தி வேண்டுமென்றே காருக்கு தீ வைக்கப்பட்டிருந்ததாக ஒன்ராறியோ தீயணைப்பு விசாரணை அதிகாரிகள் கண்டறிந்தனர். தீ வைக்கப்படுவதற்கு முன்பாகவே அந்தப் பெண் உயிரிழந்திருந்ததாகவும், அவரது மரணத்திற்கான உண்மையான காரணத்தை மறைப்பதற்காக கார் எரிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடல் கடுமையாக எரிந்திருந்ததால், அந்தப் பெண்ணின் மரணத்திற்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை.
காரை ஓட்டிய டொராண்டோவைச் சேர்ந்த சுய்மி கில்ஃபு “சைமன்” ஹப்டீப் என்பவர், 2006ஆம் ஆண்டு தீ வைத்தல், ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துதல் மற்றும் மனித உடலை அவமதித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார்.
அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 2012ஆம் ஆண்டு கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்டார்.
பேட்ஸி புளோரா லகார்ட் என அடையாளம்
20 ஆண்டுகளுக்கும் மேலாக அடையாளம் தெரியாமல் இருந்த அந்தப் பெண், தற்போது பேட்ஸி புளோரா லகார்ட் என்றும், அவரது குடும்பப் பெயர் சில பதிவுகளில் “Legarde” என்றும் எழுதப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
1962ஆம் ஆண்டு ஒன்ராறியோவில் பிறந்த பேட்ஸியின் பெற்றோர், முறையே மனிடோபாவிலுள்ள பெரன்ஸ் ரிவர் பழங்குடியினர் சமூகத்தையும் ஒன்ராறியோவிலுள்ள லோங் லேக் இலக்கம் 58 பழங்குடியினர் சமூகத்தையும் சேர்ந்தவர்கள் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
அவருக்கு இரண்டு பிள்ளைகள் இருந்ததாகவும், அவர்களில் ஒருவர் அல்பேர்டாவில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டி.என்.ஏ ஆய்வில் பேட்ஸிக்கு ஜேம்ஸ் பே பகுதியிலுள்ள கிறீ பழங்குடியினர் சமூகங்கள் மற்றும் மனிடோபாவின் ஃபிஷர் ரிவர் கிறீ சமூகத்துடன் மரபியல் தொடர்புகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்த இரண்டு அடையாளங்களும் டொராண்டோ பொலிஸ் சேவை புலனாய்வு மரபியல் தொழில்நுட்பத்தின் மூலம் மேற்கொண்ட மிக முக்கியமான மனித உடல் அடையாள விசாரணைகளில் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல தசாப்தங்களாக பெயரின்றி இருந்த மேரி மொஃபட் மற்றும் பேட்ஸி லகார்ட் ஆகியோரின் அடையாளங்கள் தற்போது மீட்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அவர்களது குடும்பத்தினருக்கும் விசாரணை முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.





Comments are closed, but trackbacks and pingbacks are open.