Reading Time: < 1 minute

கனடாவின் மணிடோபா மாகாணத்தில் உள்ள நூடிமிக் ஏரியில் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட 10 மற்றும் 13 வயதுடைய இரு சிறுவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் நான்காவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tamil Business Directory

வைட்ஷெல் மாகாணப் பூங்காவில் உள்ள ஸ்டர்ஜன் ஃபால்ஸ் நடைபாதைக்கு அருகே சனிக்கிழமை நண்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் தெரிவித்த தகவலின்படி, பாறைகளில் நடந்து சென்றுகொண்டிருந்த 10 வயதுச் சிறுவன் தவறி வேகமாக ஓடும் நீரில் விழுந்துள்ளான். அவனைக் காப்பாற்றுவதற்காக 13 வயதுச் சிறுவனும் நீரில் இறங்கியுள்ளான்.

எனினும், இருவரும் பலமான நீரோட்டத்தில் சிக்கி நீர்வீழ்ச்சியை நோக்கி அடித்துச் செல்லப்பட்டதுடன், பின்னர் நீருக்கு மேலே வரவில்லை என மணிடோபா RCMP தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை பிற்பகல் 12.40 மணியளவில் நீரில் மூழ்கியிருக்கலாம் என்ற தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, லாக் டு போனெட் RCMP அதிகாரிகள், உள்ளூர் தீயணைப்புப் படையினர் மற்றும் அவசர மருத்துவப் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மணிடோபா RCMP நீருக்கடித் தேடுதல் குழு, ஹட்டேரியன் அவசர நீர்மீட்புக் குழு மற்றும் RCMP நீர்நிலைப் பிரிவு ஆகியவை இணைந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

சுழியோடிகள் நீர்வீழ்ச்சிக்கு அருகிலுள்ள பகுதிகளில் தேடுதல் நடத்திவரும் நிலையில், டிரோன்கள் மூலம் ஏரியின் கரையோரங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் தன்னார்வலர்களும் படகுகள் மற்றும் தனிப்பட்ட நீர்வாகனங்கள் மூலம் தேடுதல் பணிகளுக்கு உதவி வருகின்றனர்.

சிறுவர்களின் ஆடைகள், காலணிகள், தனிப்பட்ட உடைமைகள் அல்லது வழக்கத்திற்கு மாறாக நீரிலோ கரையோரத்திலோ காணப்படும் பொருட்கள் தொடர்பாக உடனடியாகத் தகவல் வழங்குமாறு அப்பகுதியில் பயணிக்கும் படகோட்டிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுவரை இரு சிறுவர்களும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், நீர்ப்பகுதி மற்றும் கரையோரங்களில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக RCMP தெரிவித்துள்ளது.