குறைந்த மதிப்புள்ள இறக்குமதி பொருட்களுக்கான புதிய சுங்க விதிமுறைகள் காரணமாக, கனடா போஸ்ட் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான அஞ்சல் மற்றும் பார்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
மறுஅறிவிப்பு வரும் வரை ஆஸ்திரியா, பெல்ஜியம், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய 12 நாடுகளுக்கான பார்சல்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என Canada Post அறிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து அனுப்பப்படும் 150 யூரோக்கள் அல்லது அதற்குக் குறைவான மதிப்புள்ள பொருட்களுக்கான சுங்க விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதே இந்த நடவடிக்கைக்கு காரணமாகும்.
புதிய விதிமுறைகளின் கீழ், குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கும் கூட கூடுதல் சுங்கக் கட்டணம் மற்றும் தகவல் சமர்ப்பிப்பு தேவைகள் அமலுக்கு வருகின்றன. இதனால், வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பார்சல்களின் விவரங்கள் மேலும் துல்லியமாக வழங்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சுங்க வரியைத் தவிர்ப்பதற்காக சில பொருட்கள் குறைந்த மதிப்பில் தவறாக அறிவிக்கப்படுவதாகவும், இதனால் உள்ளூர் வணிகங்கள் பாதிக்கப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட இந்த 12 நாடுகளுக்கான புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படக்கூடிய தீர்வுகளை உருவாக்கும் வரை சேவை இடைநிறுத்தம் நீடிக்கும் என Canada Post கூறியுள்ளது.
அதேவேளை, பிற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான பார்சல் சேவைகள் வழக்கம் போல் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் இருந்து ஐரோப்பாவுக்கு பொருட்களை அனுப்ப திட்டமிட்டுள்ளவர்கள், பார்சல் அனுப்புவதற்கு முன் Canada Post இணையதளத்தில் சமீபத்திய சேவை அறிவிப்புகளை சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.




