Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், வோகான் பகுதியில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், சவாரி இயங்குனர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tamil Business Directory

இந்தச் சம்பவத்தில் மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என யார்க் பிராந்திய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

பொலிஸார் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த மே 25ஆம் திகதி சிறுமி ஒருவர் தனது நண்பர்களுடன் வோகான் பகுதியில் உள்ள பெயர் வெளியிடப்படாத பொழுதுபோக்கு பூங்கா ஒன்றிற்குச் சென்றிருந்தார்.

அங்கு சவாரி ஒன்றில் ஏறுவதற்காக சென்றபோது, பாதுகாப்புப் பரிசோதனை மேற்கொள்வதாகக் கூறிய ஊழியர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் பிராம்ப்டனைச் சேர்ந்த ஜுகாத் தாமி என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுமி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த சந்தேகநபரால் மேலும் சிலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பும் பொலிஸார், அவரை பொதுமக்கள் அடையாளம் காண உதவும் வகையில் அவரது புகைப்படத்தை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளனர்.

இந்த விசாரணை தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் அல்லது இதேபோன்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யார்க் பிராந்திய பொலிஸின் சம்பந்தப்பட்ட விசாரணைப் பிரிவை 1-866-876-5423 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், தகவல்களை Crime Stoppers அமைப்பின் ஊடாக அநாமதேயமாகவும் வழங்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.