Reading Time: < 1 minute

ரொறன்ரோ நகரில் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மளிகைப் பொருட்களின் விலைகளை மாற்றும் ‘கண்காணிப்பு விலை நிர்ணய’ முறையை தடை செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Tamil Business Directory

ரொறன்ரோ மேயர் ஒலிவியா சௌ மற்றும் டாவன்போர்ட் தொகுதி நகரசபை உறுப்பினர் அலெஜாண்ட்ரா பிராவோ ஆகியோர் இணைந்து, இந்த நடைமுறையைக் கட்டுப்படுத்துவதற்கான முன்மொழிவை நகர நிர்வாகக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளனர்.

‘Surveillance Pricing’ அல்லது ‘Algorithmic Personalized Pricing’ எனப்படும் இந்த முறையில், வாடிக்கையாளரின் இருப்பிடம், இணையப் பயன்பாடு, கொள்வனவு வரலாறு மற்றும் ஏனைய தனிப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி, அவர் ஒரு பொருளுக்கு செலுத்தத் தயாராக இருக்கும் அதிகபட்ச தொகை கணிப்பிடப்படலாம். அதன் அடிப்படையில் ஒரே பொருளுக்கு வெவ்வேறு வாடிக்கையாளர்களிடம் வெவ்வேறு விலைகள் அறவிடப்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.

மளிகைப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் ஏற்கனவே சிரமங்களை எதிர்கொண்டுவரும் நிலையில், பெரிய சில்லறை விற்பனை நிறுவனங்கள் தனிப்பட்ட தகவல்களைப் பயன்படுத்தி மேலதிக விலை அறவிட அனுமதிக்கக்கூடாது என மேயர் ஒலிவியா சௌ தெரிவித்துள்ளார்.

இந்த முன்மொழிவின்படி, ரொறன்ரோ நகர மேலாளர், நகர சட்ட ஆலோசகர் மற்றும் நகர உரிமம் மற்றும் தரநிலைகள் பிரிவுடன் இணைந்து, கண்காணிப்பு விலை நிர்ணயத்தைத் தடை செய்ய அல்லது கட்டுப்படுத்த நகரத்திற்கு உள்ள அனைத்து சட்ட வழிகளையும் ஆராய வேண்டும்.

கடைகளில் நேரடியாக விற்பனை செய்யப்படும் பொருட்களுடன், இணையம் மூலம் விற்பனை செய்யப்பட்டு ரொறன்ரோ நகருக்குள் விநியோகிக்கப்படும் மளிகைப் பொருட்களும் இந்த ஆய்வில் உள்ளடக்கப்படவுள்ளன. இதுதொடர்பான பரிந்துரைகள் 2027ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் புதிய நகரசபையிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என முன்மொழியப்பட்டுள்ளது.

மனிடோபா மாகாணம் ஏற்கனவே இத்தகைய தனிநபர் தரவு அடிப்படையிலான விலை உயர்வைத் தடை செய்வதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், மத்திய அரசும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான தனது திட்டத்தின் கீழ் தனியுரிமைப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து ஆராய உறுதியளித்துள்ளதாகவும் ரொறன்ரோ மேயரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ரொறன்ரோ நகரில் இந்தத் தடை தற்போது அமலுக்கு வரவில்லை. முதற்கட்டமாக நகரத்திற்கு உள்ள சட்ட அதிகாரங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, பின்னர் நகரசபையின் ஒப்புதலுக்காக விரிவான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.