ரொறன்ரோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மீது அண்மையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு, பணத்திற்காக குற்றச் செயல்களில் ஈடுபட வைக்கும் “criminals-for-hire” வலையமைப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஜூலை 27ஆம் திகதி அதிகாலை 4.46 மணியளவில் University Avenue பகுதியில் அமைந்துள்ள அமெரிக்க துணைத் தூதரக கட்டடத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கிச் சூட்டினால் கட்டடத்தின் முன்பகுதியில் சேதம் ஏற்பட்டிருந்த போதிலும், சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்ற வெள்ளை நிற Honda Accord காரை பொலிசார் துரத்திச் சென்றுள்ளனர். எனினும், அந்த வாகனம் மணிக்கு 140 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் சென்றதால், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொலிசார் துரத்தலை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 19 வயதான Xen-Ul-Abdeen Syed என்ற இளைஞரும், 15 வயதுடைய சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கனடாவின் இளம் குற்றவாளிகள் தொடர்பான சட்ட விதிகளின் கீழ், 15 வயது சிறுவனின் பெயரை வெளியிட முடியாது.
கைது செய்யப்பட்ட இருவரும் துப்பாக்கி, தீவைப்பு, திருடப்பட்ட சொத்துகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளையும், சர்வதேச ரீதியில் பாதுகாக்கப்படும் இடம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பான குற்றச்சாட்டையும் எதிர்கொள்கின்றனர்.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.
மறைகுறியாக்கப்பட்ட தகவல் பரிமாற்ற செயலிகள் மூலம் சந்தேக நபர்களைத் தொடர்புகொண்ட சிலர், அமெரிக்க துணைத் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக அவர்களுக்கு பணம் வழங்கியிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
இதுபோன்ற குற்ற வலையமைப்புகளில் இளைஞர்களை பணத்திற்காக துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுத்துவதுடன், பணம் பெறுவதற்கான ஆதாரமாக தாக்குதல்களை காணொளியாக பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்படுவதாக ரொறன்ரோ பொலிசார் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
எனினும், இத்தகைய தாக்குதல்களுக்கு பணம் வழங்குவது யார், அமெரிக்க துணைத் தூதரகம் ஏன் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்படுகிறது என்பன உள்ளிட்ட முக்கிய கேள்விகளுக்கு இதுவரை தெளிவான பதில் கிடைக்கவில்லை.
இந்த குற்ற வலையமைப்பின் பின்னணியில் இருந்து செயற்படுபவர்களை அடையாளம் காண்பதே தற்போதைய விசாரணையின் முக்கிய நோக்கமாக இருப்பதாக ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.