கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள ஃபால் ரிவர் பகுதியில், ஒரே வீட்டிற்குள் இரண்டு ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திங்கட்கிழமை பிற்பகல் சுமார் 3:40 மணியளவில், லிங்கன்ஷயர் டிரைவில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் ஒருவர் இறந்து கிடப்பதாக ஹாலிஃபாக்ஸ் பிராந்திய RCMP பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார், வீட்டை முழுமையாகச் சோதனை செய்தபோது, அதன் மற்றொரு பகுதியில் இரண்டாவது ஆணின் சடலத்தையும் கண்டெடுத்தனர்.
இந்த இரண்டு மரணங்களும் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் இடம்பெற்றுள்ளதாக கருதப்படுவதால், RCMP மற்றும் ஹாலிஃபாக்ஸ் பிராந்திய காவல்துறையின் ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் செயல்படும் முக்கிய குற்றப்பிரிவு மற்றும் தடய அறிவியல் அடையாளக் குழுவினர் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உயிரிழப்புகளுக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய, நோவா ஸ்கோடியா மருத்துவப் பரிசோதகர் சேவையுடனும் புலனாய்வாளர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
மேலும் தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் அவை பின்னர் வெளியிடப்படும் என நோவா ஸ்கோடியா RCMP செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவர்கள், ஹாலிஃபாக்ஸ் பிராந்திய காவல்துறையை 902-490-5020 என்ற எண்ணிலோ, அல்லது Nova Scotia Crime Stoppers அமைப்பை 1-800-222-8477 என்ற எண்ணிலோ தொடர்புகொண்டு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.




