கனடாவின் நியூ பிரன்ன்ஸ்விக் மாகாணத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கனடிய இராணுவப் பயிற்சித் தளத்தில் தீ பரவி வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு தற்போதைக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கனடிய ஆயுதப்படைகளுக்குச் சொந்தமான கேஜ்டவுன் (CFB Gagetown) இராணுவத் தளத்தின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள பயிற்சிப் பிரதேசத்தில் தீ பரவி வருவதாக கனடிய தேசிய பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவும் நிலைமையை இராணுவ அதிகாரிகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணித்து வருவதுடன், தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு தற்போதைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ள அதிகாரிகள், தீ காரணமாக அப்பகுதியில் புகைமூட்டம் காணப்படக்கூடும் என்றும் பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இராணுவப் பயிற்சித் தளத்திற்குள் அனுமதியின்றி நுழைவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு நுழைவது கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீ பரவியுள்ள பகுதியில் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த இராணுவப் பயிற்சி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், பாதுகாப்புக் காரணங்களுக்காக இராணுவப் பயிற்சித் தளத்தின் வான்பரப்பில் ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தீ பரவிய பகுதியில் இராணுவத்தினர் எவரும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கனடிய தேசிய பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.