டொராண்டோவின் நார்த் யார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வாகன நிறுத்துமிடத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்துத் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாத்தேர்ஸ்ட் வீதி மற்றும் ஃபிஞ்ச் அவென்யூ வெஸ்ட் பகுதிக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இச்சம்பவம் நடந்துள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, பலத்த மற்றும் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் பெண் ஒருவர் கண்டெடுக்கப்பட்டார்.
அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவர் உயிரிழந்தார்; காவல்துறை தரப்பில் அவரது அடையாளம் வெளியிடப்படவில்லை.
சம்பவ இடத்தில் இரண்டாவது நபர் ஒருவர் மருத்துவக் குழுவினரால் பரிசோதிக்கப்பட்ட போதிலும், அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் குறித்து காவல்துறை எத்தகைய தகவல்களையும் வழங்கவில்லை என்றாலும், காவல்துறை யாரையும் தேடவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணும் சந்தேக நபரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் என்றும், அவர்களின் உறவுமுறை குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவரவில்லை என்றும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். கத்திக்குத்துக்கான சூழ்நிலைகள் உடனடியாகத் தெரியவராத நிலையில், பொதுமக்களுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் இல்லை எனப் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.