Reading Time: < 1 minute

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேர்ந்தெடுக்கப்பட்ட பல கனேடிய பொருட்களுக்கு 50 சதவீத மேலதிக இறக்குமதி வரியை விதிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, Gordie Howe International Bridge திறப்பைக் கொண்டாடுவதற்காக அமெரிக்காவுடன் நடத்தவிருந்த கூட்டு நிகழ்விலிருந்து கனடா விலகியுள்ளது.

Tamil Business Directory

ஒன்ராறியோ மாகாணத்தின் விண்ட்சர் நகரத்தையும் அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்திலுள்ள டெட்ராய்ட் நகரத்தையும் இணைக்கும் இந்தப் பாலம், வட அமெரிக்காவின் மிக முக்கியமான எல்லைத் தாண்டிய வர்த்தகப் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அமெரிக்க அரசாங்கம் ஜூலை 20ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்புகளின்படி, குறிப்பிட்ட கனேடிய பொருட்களுக்கு 50 சதவீத மேலதிக வரி விதிக்கப்படவுள்ளது. இந்த வரிகள் ஆகஸ்ட் 19ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வீடமைப்பு மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் கிரெகர் ரொபர்ட்சனின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் புதிய வர்த்தக நடவடிக்கைகளைக் கருத்தில் கொள்ளும்போது, இரு நாடுகளும் இணைந்து கொண்டாட்ட நிகழ்வை நடத்துவது பொருத்தமானதாக இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாலத்தின் திறப்பு விழா முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. ஜூலை 24ஆம் திகதி கனேடிய அதிகாரிகள் மட்டும் பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வு நடத்தப்படும் என்றும், பாலம் திட்டமிட்டபடி ஜூலை 27ஆம் திகதி வாகனப் போக்குவரத்திற்காகத் திறக்கப்படும் என்றும் கனடிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.

ஆறு வழித்தடங்களைக் கொண்ட Gordie Howe International Bridge, டெட்ராய்ட் ஆற்றின் குறுக்கே சுமார் 2.5 கிலோமீற்றர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. கனடா–அமெரிக்கா இடையிலான சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதுடன், வட அமெரிக்க விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதிலும் இந்தப் பாலம் முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலத்தைத் திறப்பதற்கான கனடா–அமெரிக்கா ஒப்பந்தங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்றும் கனடிய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும், கூட்டு திறப்பு விழா கைவிடப்பட்டமை, இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்துவரும் வர்த்தக மற்றும் அரசியல் பதற்றத்தின் மற்றுமொரு வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.