Reading Time: < 1 minute

கொலம்பியா பனிப்பகுதியில் உள்ள அத்தாபாஸ்கா பனிப்பாறையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கனடா இராணுவத்தைச் சேர்ந்த மூன்று வீரர்கள், பனிப்பாறைப் பிளவுக்குள் விழுந்து காயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

கனடிய ஆயுதப்படைகளின் மேம்பட்ட போர் மையத்தைச் சேர்ந்த இந்த வீரர்கள், பனிப்பாறைப் பிளவுகளில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான கடினமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோதே இந்த விபத்து நேரிட்டுள்ளது.

சிக்கலான நிலப்பரப்புப் பாதையில் கயிறு மூலம் இணைந்து பயணித்துக் கொண்டிருந்தபோது, மூன்று பேரடங்கிய அந்தக் குழு எதிர்பாராதவிதமாக சுமார் 20 மீட்டர் ஆழத்திலிருந்த பனிப் பிளவுக்குள் விழுந்துள்ளது.

இது குறித்துக் கனடிய இராணுவக் கோட்பாடு மற்றும் பயிற்சி மையத்தின் சிரேஷ்ட செய்தித் தொடர்பாளர் மேஜர் பிராட்லி ரோய் தகவல் வெளியிட்டுள்ளார். இவ்வாறான பனிப் பிளவு மீட்புப் பயிற்சிகள் இயற்கையிலேயே அதிக ஆபத்து நிறைந்தவை.

இதனாலேயே, எதிர்பாராத வீழ்ச்சிகள் அல்லது விபத்துகள் நிகழும்போது உடனடியாகச் செயல்படக் கூடிய அனுபவமிக்க மீட்புக் குழுவினர் எப்போதும் இப்பயிற்சிகளில் உடன் இருப்பார்கள். இந்த பாதுகாப்பு நடைமுறையே பாதிக்கப்பட்ட வீரர்களை விரைவாக மீட்கவும் அவர்களுக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் உதவியது எனக் குறிப்பிட்டுள்ளார்.

காயமடைந்த மூன்று வீரர்களும் விமான ஆம்புலன்ஸ் மூலம் ஜாஸ்பரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்களின் தன்மை மற்றும் அவற்றின் தீவிரம் குறித்த மேலதிக விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

Comments are closed, but trackbacks and pingbacks are open.