பிரிட்டிஷ் கொலம்பியாவில் குழந்தையின் பராமரிப்பிற்காகச் செலுத்த வேண்டிய 37,312.54 டொலர் நிலுவைத் தொகையை வழங்கத் தவறிய தந்தைக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குழந்தையின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட தந்தையின் பெயர் வெளியிடப்படவில்லை.
வழக்கு விசாரணையின்போது, குழந்தைப் பராமரிப்புத் தொகையாக அவர் 37,312.54 டொலரைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
தன்னிடம் பணம் இல்லை என்றும், தனது நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலுள்ள பணத்தைத் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது என்றும் அவர் நீதிமன்றத்தில் வாதிட்டார்.
எனினும், அதே நிறுவன வங்கிக் கணக்கிலிருந்து இணையவழிச் சூதாட்டம், ஆடைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள் கொள்வனவு, விமானப் பயணக் கட்டணங்கள், இரவு விடுதிச் செலவுகள் உள்ளிட்ட தனிப்பட்ட தேவைகளுக்காகப் பணம் செலவிடப்பட்டிருந்தது வங்கி அறிக்கைகள் மூலம் தெரியவந்தது.
குழந்தைப் பராமரிப்புக்கான தனது கட்டாயப் பொறுப்பை நிறைவேற்றாமல், உண்மைக்குப் புறம்பான காரணங்களைக் கூறி நீதிமன்றத்தைத் தவறாக வழிநடத்த முயன்றதாக நீதிபதி மைக்கா ரேங்கின் தெரிவித்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி பணம் செலுத்த வேண்டிய சந்தர்ப்பங்களில் ஐந்து முறை தவறியதற்காக அவருக்கு மொத்தமாக 15 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், குழந்தைப் பராமரிப்புக்கான நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தினால், சிறைத்தண்டனைக் காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் விடுவிக்கப்படலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.