கனடாவின் கியூபெக் மாகாணத்தில் பள்ளி மாணவர்கள் மத அடையாளங்களை அணிவதற்குத் தடை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் முயற்சி என கனடிய முஸ்லிம்களின் தேசிய பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கியூபெக் அரசாங்கம் மதச்சார்பின்மைச் சட்டங்களை மேலும் விரிவுபடுத்துவதன் மூலம் குழந்தைகளின் மதச் சுதந்திரத்தையும் கல்வி கற்கும் உரிமையையும் பாதிக்க முயல்வதாக பேரவையின் தலைவர் ஸ்டீபன் பிரவுன் குற்றம் சாட்டியுள்ளார்.
குழந்தைகள் தங்களது மத நம்பிக்கைகளைப் பின்பற்றுவதற்கும், அதேவேளையில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்பதற்குமான உரிமைகள் தற்போது கேள்விக்குறியாக்கப்படுவதாக அவர் நேர்காணல் ஒன்றில் கவலை வெளியிட்டுள்ளார்.
கியூபெக்கின் புதிய கல்வி அமைச்சர் ஜோயல் அர்செனோ (Joël Arseneau), ஆரம்பப் பள்ளி மாணவர்கள் மத அடையாளங்களைக் கொண்ட ஆடைகள் மற்றும் அணிகலன்களை அணிவதற்குத் தடை விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கடந்த புதன்கிழமை (அக்டோபர் 28) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானத்தில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கியூபெக்கில் சிறுபான்மை அரசாங்கத்தை அமைத்துள்ள பார்ட்டி கெபெக்குவா (Parti Québécois) கட்சி, தனது தேர்தல் பிரச்சாரத்தின்போதே இத்தகைய தடையை அமுல்படுத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது.
மதச்சார்பின்மை என்பது மத நம்பிக்கைகள் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பும் பெரும்பான்மையான கியூபெக் மக்களின் எதிர்பார்ப்பைப் பிரதிபலிப்பதாக அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
எனினும், அனைத்து கியூபெக் மக்களுக்குமான அரசாங்கமாகச் செயற்படுவதாக அளித்த வாக்குறுதியை தற்போதைய அரசு மீறுவதாக ஸ்டீபன் பிரவுன் விமர்சித்துள்ளார்.
குறிப்பாக, முஸ்லிம் மாணவர்கள் அணியும் ஹிஜாப், யூத மாணவர்கள் அணியும் கிப்பா, கிறிஸ்தவர்கள் அணியும் சிலுவை மற்றும் சீக்கியர்கள் அணியும் தலைப்பாகை போன்ற மத அடையாளங்களுக்குத் தடை விதிப்பது மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வெளிப்படையான பாகுபாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இத்தகைய நடவடிக்கை குழந்தைகளின் மதச் சுதந்திரத்தை மட்டுமன்றி, சமத்துவமான கல்வி வாய்ப்புகளையும் பாதிக்கக்கூடும் என மனித உரிமை அமைப்புகளும் கவலை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே கியூபெக்கில் ஆசிரியர்கள் உள்ளிட்ட சில பொதுத்துறை ஊழியர்கள் பணியின்போது மத அடையாளங்களை அணிவதற்குத் தடை விதிக்கும் சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தச் சட்டத்திற்கு எதிரான வழக்கு கனடாவின் உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், புதிய தடைச் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால் அதனை நீதிமன்றத்தில் எதிர்த்துச் சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஸ்டீபன் பிரவுன் எச்சரித்துள்ளார்.
புதிய சட்டமூலம் எப்போது தாக்கல் செய்யப்படும் என்பது இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், கியூபெக் அரசாங்கத்தின் இந்தத் திட்டம் மதச் சுதந்திரம் மற்றும் குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் தொடர்பான விவாதங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.